தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பம்புசெட் மூலம் 1.16 லட்சம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, தற்போது அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடம் இருந்து மாவட்டம் முழுவதும் 257 கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் ஏற்கனவே சேமிப்பு கிடங்குகளில் அதிகளவில் தேங்கியுள்ளதால் கொள்முதல் நிலையங்களிலேயே நெல் மூட்டைகளை இருப்பு வைக்க வேண்டிய நிலை உள்ளது.
அவ்வாறு வைக்கும் பட்சத்தில் மழையில் நனைந்து சேதம் ஏற்படுகிறது. எனவே, இதை தவிர்க்கும் வகையில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெல் மூட்டைகள் நகர்வு இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. அறுவடை செய்த நெல்கள் அனைத்தும் கொள்முதல் நிலையம் வாசலிலே குவியல், குவியிலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை லஞ்சம் கேட்கின்றனர். பணம் கொடுத்தாலும் மூட்டைகள் லாரியில் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்லாமல் தேக்கமடைந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நெல் மூட்டைகள் சேதமடையும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் இதில் தலையிட்டு தேக்கம் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகளை நகர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு சில இடங்களில் நெல் விற்பனை செய்து 10 நாட்களுக்கு மேலாகியும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்காமல் உள்ளது. இதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளின் வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடியில் 3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தேவையான அளவுக்கு சாக்குகள், சணல் கையிருப்பில் உள்ளன.
இதுவரை 92 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 60 ஆயிரம் டன் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, எஞ்சிய 32 ஆயிரம் டன் நெல் கையிருப்பில் உள்ளது. இதேபோல, சம்பா பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 6.21 லட்சம் டன் நெல்லில் அரவைக்கு அனுப்பியது போக மீதம் 2.17 லட்சம் டன் நெல் உள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் உள்ளூர் அரிசி ஆலைகளுக்கு 2,500 டன் நெல், வெளி மாவட்டங்களுக்கு ரயில் மூலம் 2,000 டன் நெல் வீதம் அரவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொள்முதல் பணிகளில் தேக்கம் இருக்க கூடாது. விவசாயிகளிடம் பணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
