கோவை: ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி சலுகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கை: கோவை ஆவின் ஒன்றியத்தின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டு நுகர்வோர்களுக்கு மாதாந்திர பால் அட்டை தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 தள்ளுபடி வழங்கப்பட்டு வருவது நிறுத்தப்படுகிறது. இதனால், மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு நாளை (ஜூலை 1) முதல் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையிலேயே (எம்ஆர்பி) பால் விற்பனை செய்யப்படும்.
ஒன்றிய முகவர்கள் அனைவருக்கும் நாளை முதல் பால் தேவை பட்டியல் பாக்கெட் கணக்கிற்கு மாற்றாக பால் பெட்டிகள் அடிப்படையில் (ஒரு பெட்டி- 12 லிட்டர்) தேவைப்பட்டியல் வழங்கப்படும். கோவை மாவட்ட நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு குறித்த நேரத்தில் பால் விநியோகம் செய்யும் பொருட்டு, அனைத்து பால் முகவர்களும் தினசரி காலை மற்றும் மாலை வேலைக்கான தேவைப்பட்டியலை முந்தைய தினம் மாலை 4 மணிக்குள் பணம் செலுத்தி பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும்.
மேலும், நாளை முதல் முகவர்களுக்கு பால் தேவைப்பட்டியல் தரகுத்தொகை கழித்து பணம் செலுத்தும் வசதி அமல்படுத்தப்படும். இதனை தொடர்ந்து அச்செயலியின் மூலம் நாளை முதல் அனைத்து முகவர்களும் தினசரி தேவைபட்டியல் மற்றும் அதற்கான தொகையினை ஆவின் விற்பனை பிரிவு செயலியின் மூலமே மேற்கொள்ள வேண்டும். எனவே, முகவர்கள் அனைவரும் நாளை முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய விற்பனை பிரிவு மென்பொருள் செயலி மூலமாக தங்களது பால் மற்றும் பால் உபபொருட்களின் தேவைபட்டியலை உறுதிசெய்து, செயலி மூலம் தொகையினை செலுத்தி தங்களது தேவைபட்டியலை பதிவிட வேண்டும். அதற்கு ஏற்ப தங்களுடைய வங்கி கணக்கில் இருப்பு வைத்துக்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
* திடீர் பல்டி
ஆவின் பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி நாளை முதல் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் பவன்குமார் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், பாஜ முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றிரவு கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலமாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில், ஆவின் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பானது திருத்தி அனுப்பி வைக்கப்பட உள்ளதால் இதை பயன்படுத்த வேண்டாம் என்றும், திருத்தப்பட்ட பத்திரிகை செய்தி பின்னர் அனுப்பப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
