சென்னை: மாவட்ட முதன்மை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தொடர்ந்து இழுபறி நிலவுவதால் இன்றைக்குள் புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முதன்மை மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. சென்னையில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள், மாநகர அரசு பிளீடர், போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்படும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் உள்ளனர்.
இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், கூடுதல் குற்றவியல் நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களுக்கும் அரசு வழக்கறிஞர்கள் அரசு தரப்பில் ஆஜராகி வருகிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை மாதங்களாகியும் இந்த நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களே இதுவரை அரசு தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் ஆஜராகி வருகிறார்கள்.
இந்த நீதிமன்றங்கள்தான் விசாரணை நீதிமன்றங்கள். குற்ற வழக்குகளை விசாரிக்கும் இந்த நீதிமன்றங்களுக்கு ஒரு நாள் அரசு வழக்கறிஞர் இல்லையென்றாலும் பிரச்னை ஏற்படும். மாவட்ட நீதிமன்றங்களுக்கான வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிட்டு 20 நாட்களுக்கும் மேலாகியுள்ளது. ஆனால், இதுவரை எந்த நியமனங்களும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களின் பொறுப்பு இன்றுடன் முடிவடைகிறது. அவர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கூடுதல் செயலாளர் (நீதிமன்றங்கள்) அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளார். தற்போதுள்ள அரசு வழக்கறிஞர்களை ஜூன் 30ம் தேதி அந்த பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும். உடனடியாக அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மிகவும் கட்டாயமாகியுள்ளது. இல்லையென்றால் விசாரணை நீதிமன்றங்களின் நீதிபரிபாலனையில் சிக்கல் ஏற்பட்டு விடும். ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களின் மீதான விசாரணையில் கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிவிடும். இதே நிலைதான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நியமனத்திலும் ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் ஆட்சியில் பொறுப்பேற்ற ஓரிரு வாரங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால், தவெக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஏன் இந்த காலதாமதம் என்று தவெக வழக்கறிஞர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.
