×

தவெக தலைமையில் கூட்டணியை கட்டமைக்க திட்டம் தோழமை கட்சி தலைவர்களுடன் விஜய் நாளை ஆலோசனை: கோவளத்தில் நடக்கிறது

 

சென்னை: தவெக தலைமையில் கூட்டணியை கட்டமைக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நாளை கோவளத்தில் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சியமைக்கப் போதுமான இடங்கள் இல்லாததால் ஆளுநர் ஆட்சி அமைக்கக் அழைக்கவில்லை.

அதனால் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இதில், காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளன. அதிலும் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணியில் இணைந்து அடுத்துவர தேர்தல்களையும் எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்துவிட்டது.

அதேநேரம், இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டன. ஆனால், இன்னமும் தவெக தலைமையிலான கூட்டணியில் இணைவது பற்றியும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளைக் கொண்டு தவெக தலைமையிலான புதிய கூட்டணியைக் கட்டமைக்கும் திட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் நாளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த கூட்டத்தில் தவெக ஆட்சி அமைய ஆதரவளித்த தோழமைக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் விஜய். அவர்களை தங்களின் கூட்டணிக்கு வர அழைப்பு விடுக்கும் வகையில் இந்த கூட்டத்தை திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக விரைவில் வரவுள்ள இடைத்தேர்தல் மற்றும் தொடர்ந்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த கூட்டணியை உருவாக்கத் தீவிரம் காட்டுகிறது தவெக எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து மற்ற கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Vijay ,T.V.A. ,Kovalam ,Tamil Nadu Victory Party ,Tamil Nadu Assembly elections ,
× RELATED தனிநபர்கள் தலையீடு இருக்காது...