×

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் 30 சதவீதம் சரிவு: கொள்முதலை அதிகரிக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?

 

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் 30 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பால் கொள்முதலை அதிகரிக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கணிசமாக குறைந்துள்ளதால், பால் விநியோகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் ஆவின் பால் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வரை சென்னையில் தினசரி சுமார் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 13.50 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் மட்டும் தினசரி 2.5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தினசரி சுமார் 3 லட்சம் லிட்டர் அளவுக்கு ஆவின் பால் விநியோகம் குறைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைக்கு ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் நாளுக்கு நாள் குறைத்து வருவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வரை தினசரி சுமார் 30 லட்சம் லிட்டர் அளவுக்கு இருந்த பால் கொள்முதல், தற்போது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. தேவைக்கு ஏற்ப பால் கொள்முதல் செய்யாததே விநியோக குறைவுக்கு முக்கிய காரணம் என பால் முகவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம், கோடைகாலம் காரணமாக மாடுகளின் பால் உற்பத்தி குறைந்ததால் கொள்முதல் பாதிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கிறது. ஆனால், இதே கோடைகால சூழ்நிலைகளிலும் கடந்த சில ஆண்டுகளில் ஆவின் நிறுவனம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலம் பால் கொள்முதலை தொடர்ந்து உயர்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த ஆண்டு, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் சேகரிப்பு மையங்கள் வலுப்படுத்தப்பட்டன. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை தொடர்ச்சியாக வழங்கப்பட்டதுடன், நிலுவை தொகைகள் விரைவாக வழங்கப்பட்டன.

பால் உற்பத்தியாளர்களுடன் அதிகாரிகள் நேரடி ஆலோசனைகளை நடத்தி, தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் பாலை மீண்டும் ஆவினுக்கு திருப்பும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக மாநிலத்தின் பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டரை எட்டியதுடன், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தடையின்றி பால் விநியோகம் நடைபெற்றது. ஆனால் தற்போது அந்த வேகம் குறைந்துள்ளதாகவும், பால் கொள்முதல் அதிகரிப்பதில் நிர்வாகம் போதிய அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், தனியார் பால் நிறுவனங்கள் ஆவினை விட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை கூடுதல் விலை வழங்கி பாலை கொள்முதல் செய்து வருவதால், அதிகளவிலான பால் தனியார் நிறுவனங்களுக்கு செல்கிறது. தற்போது ஆவின் நிறுவனம் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு ரூ.44 என்ற அடிப்படை கொள்முதல் விலையுடன், லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஆனால் இந்த விலை தனியார் நிறுவனங்கள் வழங்கும் விலையை விட மிகவும் குறைவாக இருப்பதால், ஆவினுக்கு பால் வழங்க விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. எனவே, பசும்பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 ஆகவும், எருமைப்பாலுக்கான விலையை ரூ.54 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று பால் முகவர் சங்கங்களும், பால் உற்பத்தியாளர்களும் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆவின் பால் என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக உள்ளது. அரசுத்துறை நிறுவனமான ஆவின் பால் மற்றும் தனியார் நிறுவனங்களின் பால் விலைக்கு இடையே லிட்டருக்கு ரூ.16 முதல் ரூ.24 வரை விலை வித்தியாசம் இருப்பதால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பெரும்பாலும் ஆவின் பாலையே நம்பியுள்ளனர். இந்நிலையில் விநியோக குறைவு நீடித்தால், அதிக விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.

எனவே, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதைப் போல பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி, கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலையும் விநியோகத்தையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aavin ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED தனிநபர்கள் தலையீடு இருக்காது...