சென்னை: கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதன்மை தேர்வு ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று தனது இணையதளத்தில் வெளியிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2 பணியில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் (கிரேடு 2), தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் பதவிகள் என 525 இடங்கள், குரூப் 2ஏ பணிகளில் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் (கிரேடு 3), உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் (கிரேடு 3), கீழ்நிலை செயலிட எழுத்தர் என 748 இடங்கள் என மொத்தம் 828 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி வெளியிட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்தது. இத்தேர்வை 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
குரூப் 2, 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப் 2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு தமிழ்த்தகுதி தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேர்வர்களுக்கான அறை ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை என்று பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனையடுத்து 8ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்தது. தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலையில் நடைபெற்ற தேர்வை 9,223 பேரும், பிற்பகலில் நடைபெற்ற தேர்வை 9244 தேர்வர்களும் தேர்வை எழுதினர். இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான ரிசல்ட்டை நேற்று டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிட்டது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட பிரியா வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இரு வழி தொடர்பு முறையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 பணியில் 525 தேர்வர்கள், குரூப் 2ஏ பணியில் 8653 தேர்வர்களின் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
