மும்பை: மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வழக்கமாக ஜூன் 10ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு 13 நாட்கள் தாமதமாக இன்று தொடங்கியது. கடந்த 2023ம் ஆண்டில் ஜூன் 25ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இதற்கு முன்னதாக 1958 மற்றும் 1974ம் ஆண்டுகளில் ஜூன் 28ம் தேதி வரை மழை தாமதமானது. கடந்த 24 மணி நேரத்தில் மத்திய மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் அதிகபட்சமாக 78.96 மிமீ மழையும், லோயர் பரேல் பகுதியில் 78.4 மிமீ மற்றும் பரேல் டிடி பகுதியில் 72.63 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு புறநகர் பகுதியில் மாலாட் பேருந்து பணிமனையில் 61.8 மிமீ மழையும், மாங்குர்டு பகுதியில் 51.2 மிமீ மழையும் பதிவானது. இந்நிலையில், மும்பை மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடைவிடாத மழையால் மாதுங்கா கிங்ஸ் சர்க்கிள், தாதர் ஹிந்து காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், அந்தேரி சுரங்கப்பாதை வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவைகள் மற்றும் பேருந்துகள் ஓரளவிற்கு இயங்கினாலும், பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‘மகாராஷ்டிரா, தெலங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
