அருணாச்சலப் பிரதேசத்தில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு; அசாம் மாநிலத்திற்கு ஹை அலெர்ட்.!!

திஸ்பூர்: அருணாச்சல பிரதேசத்தில் பெய்த தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக, அசாம் மாநிலத்தில், அம்மாநில அரசு ஹை அலெர்ட் (High Alert) விடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் லோயர் சுபன்சிரி (Lower Subansiri) மாவட்டத்தில் மிக கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து அசாம் அரசு ஹை அலெர்ட் அதாவது உயர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளதால், கரையோர மற்றும் தாழ்வான மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வநாத் மற்றும் சோனித்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக பேரிடர் மீட்புக் குழுக்களான NDRF மற்றும் SDRF தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிக அளவு மழைப்பொழிவின் விளைவாக திடீர் வெள்ளம் மற்றும் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆற்று நீரின் வெளியேற்றம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அசாம் அரசு கூறியுள்ளது. மேலும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், சரியான நேரத்தில் தடுப்பு மற்றும் உதவி நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் பெய்யும் மழைக்கு அசாம் மாநிலம் பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் அம்மாநிலத்துன் புவியியல் அமைப்பும் (Geography) மற்றும் ஆறுகளின் தொடர்பும் காரணம் ஆகும். புரியும்படி சொல்வதென்றால் அருணாச்சல பிரதேசம் உயரமான மலைப்பகுதியாகும். அசாம் அதன் கீழே உள்ள சமவெளி பகுதியாகும். இதன் காரணமாகவே, அருணாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்த உடனே, அசாம் மாநிலத்தின் கரையோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஹை அலெர்ட் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: