நான் பேசினாலும் பிரச்னை பேசாவிட்டாலும் பிரச்னை: தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

 

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்பட்ட இந்தப் படத்தை முதலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் சுந்தர்.சி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் விலகியதால், ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் அவரும் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட சிறப்பு அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘தலைவர் 173’ படத்தின் டைட்டில் இன்று(ஜூன் 24) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு ‘தர்மன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் பேசியதாவது: நான் என்ன பேசினாலும் பிரச்னையாகிவிடுகிறது. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள். பேசினால் இதோ பேசிவிட்டார் என அதற்கும் பிரச்னை செய்வார்கள். பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. அதே மாதிரி பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும். இது ஒரு முட்டாள்தனம்தான். இந்த படத்தை முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருந்தார். பிறகு சுந்தர்.சி படத்துக்குள் வந்தார். சில கமிட்மென்ட்களால் அவரால் தொடர முடியவில்லை. பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்க இருந்தார். அவர் சொன்ன கதை, நல்ல கதைதான். அதில் விஞ்ஞானி கேரக்டர். ஆப்கானிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படமாக்க வேண்டும். அந்த செயல்முறைக்கு நேரம் பிடிக்கும். அதன் பிறகே அஷ்வத் மாரிமுத்துவிடம் கதை கேட்டேன். பிடித்திருந்தது. இந்த படத்துக்கு நான் கதை கேட்க மாட்டேன். நீங்கள் என்ன முடிவு செய்தாலும் எனக்கு ஓகே என கமல்ஹாசன் சொல்லிவிட்டார்.

இது என்னடா இது, எல்லா பொறுப்பும் நம்ம தலையிலே விழுதேன்னு சொல்லி, நான்தான் கமலிடம், இல்லை கமல், நீங்களும் கதை கேளுங்க. நாம் சேர்ந்து முடிவு எடுப்போம்னு சொன்னேன். கமலுக்கும் கதை பிடித்துவிட்டது. பேட்ட படத்துக்கு பிறகு இதில் சிம்ரன் என்னுடன் நடிக்கிறார். எனக்கும் கமலுக்குமான நட்பு 1970களில் இருந்து தொடர்கிறது. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தவர் கமல்ஹாசன். ஆடு புலி ஆட்டம் படத்தில் எனது தனிப்பட்ட ஸ்டைல்களை செய்ய ஆதரவு தந்தவர் கமல். இன்று அவர் தயாரிப்பில் நான் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். விழாவில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, ‘‘இது 5 ரூபாய் மருத்துவரை பற்றிய படம் கிடையாது. தர்மன் என்ற மருத்துவரின் ஸ்வாக் ஆன பேமிலி எண்டெர்டெயினராக படம் உருவாகிறது. கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ என்ற படம் அனைவருக்கும் பிடிக்கும். அதுபோன்ற ஒரு படம் இது. சிம்ரன், ராசி கன்னா நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார்’’ என்றார்.

 

Related Stories: