விவசாயிகளுக்கு அடுத்த பேரிடி; பயிர்க்கடன் தள்ளுபடிக்கு புதிய கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் உத்தரவால் கலக்கம்

 

* தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற கூட்டுறவு சங்கங்களில் தலைவர் மற்றும் இயக்குநர்களாக நிர்வாக குழுவில் இடம்பெற்றவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.
* கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே தலைவர், நிர்வாகக் குழு பதவிகளுக்கு வர முடியும்.
* சங்க நிர்வாகக் குழு என்பது கவுரவ பதவி மட்டுமே.
* மாதாந்திர நிர்வாகக் குழு கூட்டம் நடக்கும் போது ரூ.50 கிடைக்கும்.
* மற்றபடி சம்பளமோ, பயணப்படியோ, ஊக்கப்படியோ கிடையாது.
* தற்போது இந்தப் பதவிகளில் யாரும் இல்லை.
* கடந்த 5 ஆண்டுகளாக தனி அலுவலரால் நிர்வாகம் நடந்து வருகிறது.
* அரசின் புதிய கட்டுப்பாட்டால் முன்னாள் நிர்வாகக் குழுவினர், அவர்களின் குடும்பத்தினருக்கு கடன் தள்ளுபடி கிடைக்காது.

கோவில்பட்டி: கூட்டுறவு சங்கங்களில் தலைவர் மற்றும் இயக்குநர்களாக பதவி வகித்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என தவெக அரசு புதிய கட்டுப்பாட்டை விவசாயிகள் தலையில் அடுத்த பேரிடியாக இறக்கி உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகள் மட்டுமே பயிர்க்கடன் பெற தகுதியுள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு தண்டனையா? என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய், விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.50 ஆயிரத்துக்கு உட்பட்ட கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனவும், ரூ.5,932 கோடியே 23 லட்சம் மதிப்பிலான கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்வதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு முரண்பாடான கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார். அது மட்டுமல்லாது ரூ.ஒரு லட்சம் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே கடன் தள்ளுபடி என அரசு அறிவித்தது. இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரூ.5 ஆயிரம் கடன் தள்ளுபடி என்பது வட்டிக்கு கூட உதவாது என விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி என தள்ளுபடி தொகையை அரசு உயர்த்தி அறிவித்தது. எனினும் தவெக அரசு தேர்தலுக்கு முன்பு அறிவித்தபடி, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம், மண் சோறு சாப்பிட்டு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா, அனைத்து மாவட்ட மண்டல இணைப்பதிவாளர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்த கடன் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் செயலர், பணியாளரால் தயாரிக்கப்படும் போது, அனைத்து வகையான கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அவர் தம் குடும்பத்தினர் பெற்ற பயிர் கடன்கள் மற்றும் அனைத்து வகையான கூட்டுறவு நிறுவனங்களின் முன்னாள் நிர்வாகக் குழுவினர் அவர் தம் குடும்பத்தினர் பெற்ற பயிர்க்கடன்கள் இடம் பெறக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே கடன் பெற முடியும். வேறு யாரும் கடன் பெற முடியாது. அதே போல கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே தலைவர், நிர்வாகக் குழு பதவிகளுக்கு வர முடியும். தற்போது இந்தப் பதவிகளில் யாரும் இல்லை. இந்நிலையில் முன்னாள் நிர்வாகக் குழுவினர், அவர்களின் குடும்பத்தினருக்கு கடன் தள்ளுபடி கிடையாது என்ற அரசின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பியே 38 மாவட்டங்களும் உள்ளன.

தென்மாவட்டங்களுக்கு தென்மேற்கு பருவமழையால் அணைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் மழை அல்லது வறட்சி ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்போது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுப்பது வழக்கம். விவசாயிகள் கோரிக்கையை அரசு பரிசீலித்து தள்ளுபடி அறிவிப்பை வெளியிடும். ஆனால் தவெக அரசு பயிர்க்கடன் தள்ளுபடி விவரத்தை 21.6.2026 அன்று வெளியிட்டுள்ளது. அதில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற கூட்டுறவு சங்கங்களில் தலைவர் மற்றும் இயக்குநர்களாக நிர்வாக குழுவில் இடம்பெற்றவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிவித்துள்ளது.

கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு என்பது கவுரவ பதவி மட்டுமே. இதனால் எந்த ஆதாயமும் கிடையாது. மாதாந்திர நிர்வாகக் குழு கூட்டம் நடக்கும் போது ரூ.50 படி கொடுப்பர். மற்றபடி சம்பளமோ, பயணப்படியோ, ஊக்கப்படியோ கிடையாது. சில கூட்டுறவு கடன் சங்கங்கள் கூட்டப்படியை கூட கொடுப்பதில்லை. மேலும் நிர்வாகக் குழு, கடந்த 5 ஆண்டுகளாக இல்லாத நிலையில் தனி அலுவலரால் நிர்வாகம் நடந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசுகள் பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எவ்வித நிபந்தனைகளையும் விதித்தது கிடையாது. இந்நிலையில் தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி தகுதியுள்ள நபர்கள் பட்டியலில், கடந்த காலங்களில் கூட்டுறவு கடன் சங்கங்களில் நிர்வாக குழுவில் இடம்பெற்ற நபர்களுக்கு தள்ளுபடி கிடையாது என்று அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இதற்கு முன்பிருந்த அரசுகள் பயிர் கடன் பெற்ற நபரின் குடும்ப உறுப்பினர்கள் அரசு ஊழியராக இருத்தல் கூடாது என்று மட்டுமே தெரிவித்தது. ரூ.50 படிக்காசு பெற்றதற்காக பயிர்க்கடன் தள்ளுபடி பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்திருப்பது விவசாயிகளுக்கு விஜய் அரசு கொடுக்கும் அதிகபட்ச தண்டனையாகும். ஏற்கனவே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனில் இருந்து மீண்டு வர முடியாமல் திணறும் விவசாயிகளை கை தூக்கி விட வேண்டும். அரசின் நிபந்தனையை முழுமையாக தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: