சென்னை: சென்னை அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 2 பெண்கள் பலியானார்கள். வாய், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். 28 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் புனித பீட்டர் பவுல் கடல் உணவுப்பொருள் பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இது தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை. இங்கு கடல் வாழ் உயினங்களான மீன், இறால் போன்றவை பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தை சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மோகன், அவரது தம்பி ஜெகன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள்.
இந்த தொழிற்சாலையில் ஒரு ஷிப்ட்டுக்கு 150 முதல் 200 பேர் வரை பணியாற்றுவார்கள். இரண்டு ஷிப்ட்டுகளாக பிரித்து 400 பேர் வரை பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 100க்கும் மேற்பட்டோர் மட்டுமே பணியாற்றி உள்ளனர். அப்போது, திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 60 பெண்கள், 5 ஆண்கள் என 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 35க்கும் மேற்பட்டோர் வெளியே தப்பி ஓடி வந்துள்ளனர்.
வாயு கசிவு ஏற்பட்டு தொழிற்சாலையில் மயங்கி மூக்கு, வாயில் ரத்தம் வந்த நிலையில் இருந்தவர்களை சக தொழிலாளர்கள் சிலர் பாலிதீன் பைகளால் முகத்தை மூடிக்கொண்டு தங்களது தோளில் சுமந்தபடி தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். மஞ்சங்காரணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 42 பெண்களும், 2 ஆண்களும், செங்குன்றம் தனியார் மருத்துவமனையில் 21 பேரும் சிகிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மேல் சிகிச்சைக்காக 15 பேர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒடிசா மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா, டிஐஜி சேஷசாய், திருவள்ளூர் எஸ்.பி. சாய்பிரனித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் மஞ்சங்காரணை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து மஞ்சங்காரணை மற்றும் செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளிலிருந்துமேலும் கவலைக்கிடமான 15 பேரை மேல் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்த தவெக எம்எல்ஏக்கள் கும்மிடிப்பூண்டி விஜயகுமார், பொன்னேரி ரவி, திருவள்ளூர் அருண்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
பின்னர் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் குமார் மஞ்சங்காரணை மற்றும் செங்குன்றம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தொழிலாளர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த விபத்து நடந்ததற்கு முதல்வர் வருத்தம் தெரிவித்தார். நானும் வருந்துகிறேன். இதில் 2 பெண்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்’’ என்றார். இந்த தொழிற்சாலை விபத்தில் அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் 2 பேர் மட்டும் தான் உயிரிழந்துள்ளனர் என கூறுகின்றனர்.
ஆனால் காவல்துறையின் மூலம் கூறும்போது 7 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறிவருகிறார்கள். விபத்து நடந்த தொழிற்சாலைக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்புக்குழு, சுகாதாரத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா மற்றும் எஸ்பி சாய்பிரனித், ஆர்டிஓ ஆகியோர் மீண்டும் மாலை 6 மணியளவில் அந்த தொழிற்சாலையை ஆய்வு செய்தனர்.
இது சம்பந்தமாக சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தொழிற்சாலை உரிமையாளர் மோகன், மேலாளர் டேனியல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் கன்னிகைப்பேர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னிகைப்பேர் பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் அதிக கழிவு வெளியேறி அதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
நிலத்தடி நீரில் இந்த கழிவு தண்ணீர் செல்வதால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இதே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. எனவே, இந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும்’’ என்றனர்.
* எத்தனை பேர் பலி?
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
விஷவாயு கசிவால் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, வேல்ஸ் மருத்துவமனை, வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர்.
7 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறுவது உண்மை இல்லை. இதுவரை 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கவலைக்கிடமாக இருப்பவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நச்சுத்தன்மை அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலையில் ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறோம்.
* இறால் மற்றும் மீன்தொழிற்சாலைகளில் அமோனியா வாயு எதற்கு?
இறால் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் அமோனியா வாயு முக்கியமாக குளிர்பதன அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. கடல் உணவுப் பொருட்களை நீண்ட காலம் தரம் குன்றாமல் பாதுகாக்க குறைந்த வெப்பநிலை அவசியமாகும். பொதுவாக புதிய மீன் மற்றும் இறால் 0 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குளிர்சாதன நிலையில் நிலை பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய குளிர்சாதன அறைகள், ஐஸ் தயாரிப்பு நிலையங்கள் மற்றும் உறைபதன கிடங்குகளில் அமோனியா குளிர்விப்பானாக செயல்படுகிறது. அமோனியா அதிக குளிர்விக்கும் திறன் கொண்டதுடன், தொழில்துறை அளவிலான குளிர்பதன அமைப்புகளுக்கு செலவு குறைந்த மற்றும் திறன் வாய்ந்த தீர்வாக கருதப்படுகிறது.
* அமோனியா வாயு கலந்த உணவை சாப்பிட்டால் என்ன ஆகும்?
குளிரூட்டும் குழாய்களில் கசிவு ஏற்பட்டால், அமோனியா வாயு நேரடியாக மீன்/இறால் மீது படிந்து உணவுப் பொருளில் கலக்கலாம். இதனால் உணவில் அமோனியா வாசனை மற்றும் சுவை மாற்றம் ஏற்படும். அதிக அளவு அமோனியா கலந்த உணவை சாப்பிட்டால் உடனடியாக தொண்டை எரிச்சல், வலி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். குறைந்த அளவு தொடர்ந்து உட்கொண்டால் சுவாசக் குழாய் மற்றும் செரிமான மண்டலத்தில் எரிச்சல் ஏற்படலாம்.
* பாதுகாப்பு குறைபாடு காரணமா?
அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களை அமைச்சர் ராஜ் மோகன் நேரில் பார்வையிட்டு, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அங்கு இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு ராஜிவ் காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் உயர்மட்ட சிகிச்சைகள் வழங்கியுள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் சிபிஆர்எல் சிறப்பு குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 2 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவை, திருவள்ளூரில் இருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்.
தொழிற்சாலையில் வாயு கசிவு எப்படி ஏற்பட்டது, பாதுகாப்பு குறைபாடு காரணமா என்பது பற்றி ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறோம். தற்போது வரை 2 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திடம் சொல்லி அவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணி நேரத்தில் ஒரு அறிக்கை தயார் செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களில் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தரவும் கேட்டுள்ளோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
* குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட உணவு, குடிநீர்
பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிந்த தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டு கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு, கன்னிகைப்பேர் ஊராட்சி மன்றத்தின் குப்பை அள்ளும் வாகனத்தில் உணவு மற்றும் குடிநீர் கொண்டு வரப்பட்டன. உணவை அலட்சியமாக குப்பை அல்லும் வாகனத்தில் கொண்டு வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
* விசாரணை குழு அமைப்பு
அமோனியா வாயு கசிவால் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இறந்தவர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு செலவில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* மூச்சை அடைக்கும் வாயு
அமோனியா என்பது நிறமற்ற வாயுவான இது, மூச்சை அடைக்கும் வகையிலான கடும் நெடி கொண்டது. அமோனியா விவசாயத்தில் உரங்கள் தயாரிக்க, குளிர்பதன அமைப்புகளில் குளிர்விப்பானாக, ரசாயனப் பொருட்கள் உற்பத்தியில் மற்றும் பல்வேறு தொழில்துறை செயல்முறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
* உயிரிழப்பிற்கு காரணம் என்ன?
பாதிக்கப்பட்டவர்கள் அமோனியாவை பெருமளவில் சுவாசித்துள்ளனர். உடலில் உள்ள ஈரப்பதத்துடன் இணைந்து ‘அமோனியம் ஹைட்ராக்சைடு’ ஆக கடுமையான காரத்தன்மையாக மாறியுள்ளது. ரசாயனம் மூச்சுக்குழாய், தொண்டை மற்றும் நுரையீரலின் மேற்பரப்பில் கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
காற்றுப் பாதைகள் வீங்கி அடைபட்டதோடு நுரையீரலின் அடிப்பகுதி செல்கள் கடுமையாகச் சேதமடைந்து ரத்தக் குழாய்களில் நீர் கசிந்து நுரையீரலில் ரத்தத்தில் ஆக்சிஜன் கலப்பது முற்றிலும் தடைபட்டு ஆக்சிஜன் பற்றாக்குறை (Hypoxia) ஏற்பட்டு உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து மரணம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
