வால்பாறை : வால்பாறையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக ரம்மியமான மேகக் கூட்டம், குளிர்ந்த காற்று, இதமான வெயில் மற்றும் சாரல் மழை என மாறி மாறி நிலவும் காலநிலை சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
காலை நேரத்தில் மலைத் தொடர்களை போர்த்தியபடி காணப்படும் மேகங்கள், சிறிது நேரத்தில் விலகி பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டங்களையும், பள்ளத்தாக்குகளையும் வெளிக்காட்டுகின்றன. பின்னர் இதமான வெயில் பரவ, மீண்டும் சாரல் மழை தூறத் தொடங்குவதால் இயற்கை எழில் மேலும் மெருகேறுகிறது.
சாலையோரங்களில் நிலவும் மூடுபனி, பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்கள், மேகங்களுக்குள் மறைந்து தோன்றும் மலைச் சிகரங்கள், அடர்ந்த வனப்பகுதிகள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.
குறிப்பாக வியூ பாயிண்ட்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நின்று இயற்கைக் காட்சிகளை ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.
தற்போதைய காலநிலை காரணமாக இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் மலைப்பகுதி பயணத்தை விரும்புவோருக்கு வால்பாறை ஏற்ற இடமாக மாறியுள்ளது.
இயற்கையின் பல்வேறு முகங்களை ஒரே நாளில் காணும் வாய்ப்பு கிடைப்பதால், வால்பாறை நோக்கி வரும் பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து இருந்தாலும், இ-பாஸ் நடைமுறை கட்டுப்படுத்தி வருகிறது.
