தேயிலை தோட்டங்களில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

வால்பாறை : வால்பாறை பகுதியில் கவாத்து வெட்டப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் கயோலின் மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வால்பாறையில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தேயிலைத் தோட்டங்களில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய தளிர் வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கவாத்து வெட்டப்பட்ட பின்னர் செடிகள் நேரடி வெயில், அதிக வெப்பம், திடீர் மழை மற்றும் பனி தாக்குதலுக்கு உள்ளாகும்.இதனைத் தடுக்கும் வகையில் கயோலின் எனப்படும் வெண்மண் அடிப்படையிலான பாதுகாப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

இம்மருந்து இலைகள் மற்றும் கிளைகளின் மீது வெள்ளை நிற பாதுகாப்புப் படலத்தை உருவாக்கி, சூரிய ஒளியின் தீவிரத்தை குறைப்பதுடன், செடிகளில் ஏற்படும் வெப்ப அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் ஈரப்பதத்தை பாதுகாத்து புதிய தளிர்கள் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.தேயிலைத் தோட்டத் தொழில்நுட்ப நிபுணர்களின் கூற்றுப்படி, கயோலின் தெளிப்பு மூலம் செடிகளின் நீரிழப்பு குறைவதுடன், அதிக வெப்பநிலையால் ஏற்படும் சேதமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக கவாத்து வெட்டப்பட்ட முதல் சில வாரங்களில் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.தற்போது வால்பாறையின் பல்வேறு தேயிலைத் தோட்டங்கள் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து கவாத்து வெட்டப்பட்டிருந்த நிலையில், கால நிலையை கருத்தில் கொண்டு கயோலின் தெளிக்கப்பட்டுள்ளதால், மலைச்சரிவுகள் முழுவதும் வெள்ளை நிற போர்வை போர்த்தியதுபோல் தோற்றமளிக்கின்றன. இதனை காணும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்து ரசித்து வருகின்றனர்.

Related Stories: