*பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்
நாமக்கல் : நாமக்கல்லில், ஜென்-ஸி திமுக என்ற தலைப்பில் இளம் தலைமுறையினருக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் இளைஞர்கள் பேசினார்கள். சமூக நீதி, கல்வி, டிஜிட்டல் ஊடகங்களின் பங்கு மற்றும் இன்றைய தலைமுறையின் சமூகப் பொறுப்புகள் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ஜென்-ஸி தலைமுறையினரிடம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக திராவிட இயக்கக் கொள்கைகள் மற்றும் சமூகநீதி கருத்துகளை மேலும் ஆழமாக கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். திமுக ஆதரவு உணர்வுள்ள இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
திராவிட இயக்கத்தின் மீதான கொள்கைப் பற்றுடன் செயல்படும் இளைஞர்களின் தன்னார்வ முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இளம் தலைமுறையினரின் மொழிநடை மற்றும் சமூக ஊடக கலாச்சாரத்திற்கு ஏற்ப, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், மீம்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் திராவிட சித்தாந்தம் மற்றும் சமூகநீதி கருத்துக்களை எளிமையாகவும், சுவாரசியமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து கூட்டத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், இளைஞர்கள் தங்களது புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான யோசனைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக உத்திகள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் சமூகநீதி மற்றும் பெரியாரிய சிந்தனைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் புதிய டிஜிட்டல் இளைஞர் வலையமைப்பை உருவாக்குவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நாமக்கல் -பரமத்தி சாலையில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலை முன் அனைவரும் கூடி பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதுகுறித்து சட்டமன்றத்தில் எடுத்துரைத்தும் அதற்கு பதிலளிக்காத முதலமைச்சர் விஜயை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கருப்பு வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். இதில்.ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.
