ராகுல் காந்தி தலைமையில் கோட்டாவில் இன்று மாணவர்கள் மாநாடு: 10,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

புதுடெல்லி: தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் மாணவர்கள் மாநாடு கோட்டாவில் இன்று நடக்க உள்ளது. இதில் 10,000 மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு, அதிகரிக்கும் தேர்வு கட்டணங்கள், நியாயமான, வெளிப்படையான பணி நியமனம் போன்றவற்றை உறுதி செய்வதில் அரசு தோல்வியடைந்ததால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்தும் வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் தொடர் மாணவர்கள் மாநாடு நடத்தி, மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இதற்கான முதல் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இன்று நடக்க உள்ளது. இதில், சுமார் 10,000 மாணவர்களை கூட்ட காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.

கோடா மாநாடு தொடர்பாக ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘எனது இளம் நண்பர்களே, ஜென்-ஸி தலைமுறை நண்பர்களே, ஒரு விஷயம் எனக்கு தெளிவாக தெரிகிறது. அதை உங்கள் இதயத்திலும் ஆழமாக பதியவைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு இந்திய இளைஞரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பு. இருப்பினும், பொறுப்புணர்வு மற்றும் நேர்மை ஆகிய இரண்டும் மோடி அரசுக்கு அந்நியமானவை. வினாத்தாள் கசிவு, தேர்வு நிர்வாக குளறுபடி, ரத்து செய்யப்பட்ட பணி நியமனங்கள், விண்ணை முட்டும் கட்டணங்கள், தனியார்மயமாக்கல், ஊழல்கள் ஆகியவை தினமும் கோடிக்கணக்கான மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் கருவிகள். இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அதனால் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தெரு, நகரம், ஊரிலிருந்தும் எழும் மாணவர்களின் குரலை கோட்டாவில் சக்தி வாய்ந்த முழக்கமாக மாற்றுவோம்’’ என கூறி உள்ளார்.

நாட்டின் முக்கிய பயிற்சி மையங்களின் மையமாக கோட்டா திகழ்கிறது. இங்கு சுமார் 1.2 லட்சம் மாணவர்கள் பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

பாஜ போராட்டம்
ராகுல் காந்தியின் மாணவர்கள் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாவில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சிலை முன்பாக பாஜ கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடக்க உள்ள நிலையில் மாணவர்கள் கவனத்தை சிதறடிக்கும் வகையில் ராகுல் காந்தி மாநாடு நடத்துவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான வினாத்தாள் கசிவு நடந்த போது ராகுல் காந்தி அமைதி காத்ததாகவும் பாஜவினர் குற்றம்சாட்டி முழக்கமிட்டனர்.

Related Stories: