நிதி முறைகேடு விவகாரம்; அயோத்தி ராமர் கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை: சிறப்பு விசாரணைக்குழு நடவடிக்கை

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் ரூ.24 கோடி நிதி திருடப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அயோத்தியைச் சேர்ந்த முக்கிய இந்துத் தலைவரும், முன்னாள் கரசேவகரும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜ தலைவர் எல்.கே. அத்வானியுடன் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவருமான சந்தோஷ் துபே, இதுகுறித்து ராம ஜென்மபூமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சரத் சுக்லாவும் அதே காவல் நிலையத்தில் நேற்று இதே போன்றதொரு புகாரை அளித்தார். நிதி முறைகேடு வழக்கில் முக்கியமாகப் பேசப்படும் பெயரான ராம் சங்கர் என்கிற தின்னு யாதவ், இவ்விவகாரத்தில் எனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது ஆதாரமற்றது என்றும், தான் நிரபராதி என்றும் கூறினார். பணம் எண்ணப்பட்ட அறைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்தப் பொறுப்பில் வேறு சிலர் இருந்தனர் என்றும் தின்னு யாதவ் மறுத்தார்.

இதற்கிடையே அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடைப் பணம் திருடப்பட்டது மற்றும் அறக்கட்டளையின் நிதி நிர்வாகம் தொடர்பான புகார்களை விசாரிக்க, உத்தரப் பிரதேச அரசு ஜூன் 13 அன்று மூன்று பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழுவில் லக்னோ மண்டல ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த், காவல் துறைத் தலைவர் கிரண் எஸ் மற்றும் நிதித் துறை சிறப்புச் செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அயோத்தி சென்றுள்ள அவர்கள் நேற்றுமுன்தினம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்று காலை 10 மணி முதல் விசாரணையைத் தொடர்ந்தனர். கோயில் நிர்வாகத்துடன் தொடர்புடைய 12க்கும் மேற்பட்டவர்களிடம் இக்குழு விசாரணை நடத்தியது.

இதில் ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை’யின் மூத்த அதிகாரி கோபால் ராவ் மற்றும் கோயில் வளாகத்திற்குள் நேரடியாகச் செல்லும் வசதி கொண்ட சில முக்கிய நபர்களும் அடங்குவர் என்று தகவல்கள் கூறுகின்றன. முக்கிய புகாரில் சிக்கிய அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் விசாரிக்கப்பட்டாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.

ரூ.3 கோடி நிலத்தை ரூ.24 கோடி கொடுத்து வாங்கிய அறக்கட்டளை நிர்வாகி
நன்கொடைத் தொகை திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மீது 24 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் வாங்கிய நிலம் தொடர்பான ஆவணங்களின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி தலைவர், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ராய் 24 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், ‘‘ராம ஜென்மபூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன. இதை ஒரு முன்னாள் பாஜக எம்.பி.யே வெளிப்படுத்தியுள்ளார். இதற்குப் பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பு. ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களுக்கு அறக்கட்டளையில் பதவிகள் வழங்கப்பட்டன.

முதலில், ராம ஜென்மபூமி கோயில் அடிக்கல் நாட்டு விழாவின் பெயரால் பாஜ ஆர்எஸ்எஸ் தரப்பினர் பெருமளவிலான நிதியைத் திரட்டினர், ஆனால் அதற்கான கணக்கு வழக்குகள் எதுவும் இல்லை. இது 1,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் திருடியதற்குச் சமம். இந்த முக்கியமான விவகாரம் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மகா கும்பமேளாவின் போது ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஒரு அதிகாரியிடமே இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜ வெறும் சம்பிரதாயத்திற்காகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது தெளிவாகிறது. உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் ’ என்றார்.

Related Stories: