நீட் மறுதேர்வுக்காக வரும் 22ம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு தடை: செய்திகளை திருத்தும் வசதி ஜூன் 30 வரையிலும் முடக்கம்

புதுடெல்லி: நீட்-யுஜி மறுதேர்வையொட்டி தவறான தகவல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு வரும் 22ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாகவும், அதன் செய்திகளை திருத்தும் வசதி வரும் 30ம் தேதி வரை முடக்கப்படுவதாகவும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட்-யுஜி நுழைவுத்தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்தப்பட்டு, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நீட் மறுதேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் பிரிவு 69ஏவின் கீழ், நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு திடீர் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 22ம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் செய்திகளை திருத்தும் வசதியை வரும் 30ம் தேதிவரை முடக்குமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி நடக்க உள்ள நீட் மறுதேர்வில் பங்கேற்கும் மாணவர்களை ஏமாற்ற முறைகேடு கும்பல்கள் இத்தளத்தை திட்டமிட்டு பயன்படுத்தி வருவதை கருத்தில் கொண்டும், பொது ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்த 2 நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக, ‘PAPER LEAKED NEET’, ‘Re-NEET 2026’, ‘Private Mafia’, ‘REE NEET MAFIAA’ போன்ற பெயர்களில் (அதாவது தங்கள் நோக்கத்தை வெளிப்படையாக விளம்பரப்படுத்தும் பெயர்களில்) இயங்கிய சேனல்கள், நீட் மறுதேர்வு வினாத்தாளை வழங்குவதாகக் கூறி, தேர்வர்களிடமிருந்தும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் சில ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரையிலான தொகையைக் கேட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பாதுகாக்கப்பட்ட தேர்வு நடைமுறைச் சங்கிலிக்கு வெளியே அத்தகைய வினாத்தாள் எதுவும் கிடைக்கப்பெறாது என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம். எனவே மறுதேர்வு வினாத்தாள் குறித்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒரு மோசடியே.

டெலிகிராம் செயலியில் பழைய செய்தியை திருத்தி, ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வின் வினாத்தாள் பிடிஎப்-ஐ இணைத்து, தேர்வுக்கு முன்வே வினாத்தாளை வழங்கியதாக மோசடி நபர்கள் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர். இதற்கு முன் தேர்வு முடிந்த பிறகு இதே போன்று, டெலிகிராமின் செய்திகளை திருத்தும் வசதியை பயன்படுத்தி, பழைய செய்தியை திருத்தி அதில் உண்மையான வினாத்தாளை இணைத்து அதையே ஆதாரமாக்கி பொய்யான தகவலை பரப்பி உள்ளனர். இந்த வழி இம்முறை அடைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

டெலிகிராமுக்கு மட்டும் தடை ஏன்?

  • டெலிகிராம் செயலியில் அசல் செய்தி அனுப்பப்பட்ட நேரத்தை மாற்றாமல் அதனுடன் இணைக்கப்பட்ட பிடிஎப் போன்ற ஆவணங்களை மாற்றி அமைக்க முடியும்.
  • இந்த செய்திகளை திருத்தும் வசதி மூலம் தற்போது பல டெலிகிராம் சேனல்களில் நீட் மறுதேர்வு வினாத்தாள் தருவதாகவும் ஏற்கனவே முந்தைய தேர்வில் அவர்கள் வினாத்தாளை வழங்கியதாக பழைய செய்திகளை திருத்தி மாணவர்களை நம்ப வைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
  • இதுபோன்று செய்திகளை திருத்தும் வசதி வாட்ஸ்அப் போன்ற பிற ஊடகங்களில் இருந்தாலும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே திருத்த முடியும். பிடிஎப் போன்ற பைல்களை மாற்ற முடியாது.
  • டெலிகிராமின் செய்திகளை திருத்தும் வசதியை பயன்படுத்தி முறைகேடாக ஆவணங்களை மாற்றி அதையே வினாத்தாள் கசிந்ததாக மோசடி நபர்கள் ஆதாரமாக காட்டுவதாக தேசிய தேர்வு முகமை குற்றம்சாட்டுகிறது. இந்த ஆதாரங்களை மையமாக வைத்து நாடு முழுவதும் விவாதங்கள் நடத்தப்படுகின்றன.
  • டெலிகிராமில் ஒரு கணக்கை தொடங்குபவர்கள் மொபைல் எண் உள்ளிட்ட அடையாளங்களை மறைக்க முடியும். இதன் மூலம் அவர்களை வெளிப்படையாக கண்டறிய முடியாது.
  • டெலிகிராமில் சேனல் தொடங்கி எத்தனை பேரை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். இந்த குரூப்பில் பலரும் தங்களின் அடையாளங்களை மறைத்து பொய் தகவல்களை பரப்ப முடியும். எனவே குரூப்பில் யார் மோசடி நபர் என்பது கண்டறிவது சிரமமாகி விடும்.
  • வாட்ஸ்அப் போல் இல்லாமல் டெலிகிராமில் எவ்வளவு பெரிய பைல்களையும் இணைத்து அனுப்ப முடியும். புது திரைப்படங்களை கூட இதில் பகிர முடியும். வாட்ஸ்அப் போல் அல்லாமல் டெலிகிராம் செயலில் தனது பயனர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிப்பதில்லை. அதற்கான ஏஐ டூல்களையும் டெலிகிராம் பயன்படுத்துவதில்லை. இது மோசடி நபர்களுக்கு வசதியாகிறது.

பொருத்தமற்ற தீர்வு
இணைய சுதந்திர அறக்கட்டளை (ஐஎப்எப்) அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘வினாத்தாள் கசிவு என்பது அமைப்புக்குள்ளிருந்தோ, உள்ளிருப்பவர்களிடமிருந்தோ அல்லது அச்சிடுதல் மற்றும் விநியோகச் சங்கிலியிலிருந்தோதான் நிகழ்கிறது. டெலிகிராம் தளம் என்பது விநியோகச் சங்கிலியின் இறுதிப் பகுதியாக மட்டுமே செயல்படுகிறது. எனவே, டெலிகிராம் சேவையை முடக்குவது, ஊடகங்களின் கவனம் இந்தத் தடையின் மீது திரும்பியிருக்கும் வேளையில், தொடர்ந்து நிகழக்கூடிய தொடர் தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவே அமைகிறது. இது பொருத்தமற்ற தற்காலிக தீர்வு. அரசியலமைப்புக்கு முரணானது’’ என கூறி உள்ளது.

பிளே ஸ்டோரில் தற்காலிக நீக்கம்
நீட் தேர்வு மறுதேர்வு முடியும் வரையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், டெலிகிராம் செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டெலிகிராம் செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தும் டெலிகிராம் நீக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories: