சமூக ஊடகங்களில் வைரல் யுபிஎஸ்சி தேர்விலும் வினாத்தாள் கசிவு..? ஒன்றிய அரசு மறுப்பு

புதுடெல்லி: ஐஏஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுக்க ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த மே 24ம் தேதி முதல்நிலை தேர்வுகளை நடத்தியது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதற்கிடையே, யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாள் கசிந்ததாக காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ குற்றம்சாட்டியது.

அதன் சமூக ஊடக பதிவில் சில ஆவணங்களை பகிர்ந்து, ‘‘யுபிஎஸ்சி தேர்வில் 100 கேள்விகளில் 82 கேள்விகள் ஒரே பயிற்சி மையத்தின் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தது. இது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல. தீவிர விசாரணைக்குரியது. தங்கள் பல ஆண்டுகால கடின உழைப்புக்கு மத்தியில் ஏதேனும் அநீதி இழைக்கப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள இளைஞர்கள் விரும்புகிறார்கள்’’ என கூறப்பட்டிருந்தது.

இதற்கு பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு பிரிவு நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விளக்கத்தில், ‘‘இந்த குற்றச்சாட்டு போலியானது. யுபிஎஸ்சி தேர்வுக்கான வினாத்தாள்கள் இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களால் தயாரிக்கப்படுகின்றன. தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும். அதிகாரப்பூர்வமான ஆதாரங்களில் இருந்து பெறப்படும் தகவல்களை மட்டுமே நம்பவும்’’ என கூறப்பட்டுள்ளது.

மெயின் தேர்வுக்கு 1000 பேர் தேர்வு
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வைத் தொடர்ந்து, இந்திய வனப் பணியாளர் (ஐஎப்ஓஎஸ்) மெயின் தேர்வுக்கு 1046 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக யுபிஎஸ்சி நேற்று தெரிவித்துள்ளது. மொத்தம் 80 காலி பணியிடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 150 காலி பணியிடங்களுக்கு 2,116 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்ததாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Related Stories: