தர்மசாலா: இந்தியா -ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் தர்மசாலாவில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மழையால் 25 ஓவராக குறைக்கப்பட்ட நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 24.5 ஓவரில் 194 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய பவுலங்கில் அறிமுக வீரர்கள் குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்தியா 22.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்து வென்றது. நாட் அவுட்டாக 84 ரன் அடித்த கேப்டன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘‘இது ஒரு டி20 போட்டி போல இருந்தது. குர்பாஸ் சிறப்பாக பேட் செய்தார். கடைசி பாதியில் நாங்கள் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது. நான் ஸ்லிப் கேட்ச்சுக்கு நிறைய பயிற்சி செய்திருக்கிறேன். இன்று கடினமான கேட்ச்சை பிடித்தது மகிழ்ச்சி. ரோகித் ரீப்ளேயை பார்த்து விட்டு, ரன் அவுட் அவரின் தவறுதான் என்றார். குர்னூரின் வேகம், லென்த், ஸ்விங் ஆகியவை ஈர்க்கக்கூடியதாக இருந்தன. ஹர்ஷ் முதல் ஓவரிலேயே 16 ரன் கொடுத்தாலும் பின்னர் சிறப்பாக செயல்பட்டார்’’ என்றார். 2வது போட்டி வரும் ஜூன் 17ம் தேதி லக்னோவில் நடக்கிறது.
