நியூயார்க்: பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘டி’ பிரிவின் முதல் போட்டியில் பராகுவே அணிக்கு எதிராக அமெரிக்க அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியது. லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கம் முதலே அமெரிக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் அமெரிக்காவின் புலிசிக், வெஸ்டன் மெக்கின்னி ஆகியோரின் ஒருங்கிணைப்பு காரணமாக, பராகுவே அணியின் மிட் பீல்டர் டேமியன் போபாடிலாவின் காலில் பட்டு ‘ஓன் கோல்’ விழுந்தது.
31-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆன்டோனி ராபின்சன் கொடுத்த பாஸை புலிசிக் பெற்று, அதனை போலாரின் பாலோகுனிடம் தள்ள அவர் நேர்த்தியாக கோல் ஆக்கினார். முதலாவது பாதி முடிவடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக டில்மேன் கொடுத்த அருமையான பாஸைப் பெற்ற பாலோகுன் தனது இடது காலால் பந்தை உதைத்து மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
2வது பாதியில் அமெரிக்க அணியின் கேப்டன் புலிசிக்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக செபாஸ்டியன் பெர்ஹால்டர் களம் இறக்கப்பட்டார். இதை சாதகமாக்கிய பராகுவே அணி 73-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. கோல் கீப்பர் ஆர்லாண்டோ கில்லின் லாங் கிக்கை அமெரிக்க வீரர் கிறிஸ் ரிச்சர்ட்ஸ் தடுக்கத் தவறியதால் பராகுவேயின் இளம் வீரர் ஜூலியோ என்சிசோ பந்தை பெற்று மொரிசியோவிடம் கொடுத்தார்.
அவர் அதனை எளிதாக அமெரிக்க கோல்கீப்பர் மேட் ப்ரீஸைக் கடந்து கோலாக மாற்றினார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அமெரிக்காவின் அலெக்ஸ் ப்ரீமேனின் அசிஸ்ட்டைப் பெற்று, அஜியோ ரெய்னா நேர்த்தியான கோல் அடித்தார். இதன் மூலம் அமெரிக்க அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அமெரிக்க அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
* ஒரே போட்டியில் அதிகபட்ச கோல்
அமெரிக்க அணியின் பயிற்சியாளர் மொரிசியோ போச்செட்டினோ தனது சிறந்த ஆட்ட அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர். அதற்கு சான்றாக பராகுவேக்கு எதிராக கேப்டன் கிறிஸ்டியன் புலிசிக் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காயம் காரணமாக விலகியிருந்த கிறிஸ் ரிச்சர்ட்ஸ் மீண்டும் களம் திரும்பியதோடு, டிம் ரீம், அலெக்ஸ் ப்ரீமேன் ஆகியோருடன் இணைந்து அணியின் தற்காப்பு அரணை பலப்படுத்தினார்.
மாலிக் டில்மேன், போலாரின் பாலோகுன் ஆகியோர் புலிசிக்குடன் இணைந்து தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்து அமெரிக்க அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வென்றது. உலகக் கோப்பை வரலாற்றில் அமெரிக்க அணி ஒரே போட்டியில் பதிவு செய்த அதிகபட்ச கோல் எண்ணிக்கை இதுவாகும். இந்த போட்டியில் பராகுவேயின் ‘பெனால்டி’ பகுதிக்குள் அமெரிக்கா 53 முறை பந்துடன் நுழைந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் பராகுவே அணி 9 முறை மட்டுமே இந்த வாய்ப்பை பெற்றது.
