டொராண்டோ: பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் போஸ்னியா, கனடா அணிகள் மோதிய ஆட்டம் ‘டிரா’ ஆனது. கனடாவின் டொராண்டோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே ரசிகர்களின் பேராதரவுடன் கனடா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் போஸ்னியா அணியின் இவான் பாசிக் வீசிய கார்னர் பந்தை சீட் கொலாசினாக் தட்டிவிட அதைப் பயன்படுத்திய ஜோவோ லுகிக் கோலாக மாற்றினார்.
இது அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் முதல் கோலாகும். இதனால், முதல் பாதியில் போஸ்னியா 1-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் கனடா அணி ஆக்ரோஷமாக விளையாடி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. காயமடைந்த கேப்டன் அல்போன்சோ டேவிஸ் இல்லாத நிலையிலும் கனடா வீரர்கள் கடுமையாக போராடினர். தோல்வியின் விளிம்பில் இருந்த கனடா அணியை நட்சத்திர வீரர் கைல் லாரின் காப்பாற்றினார்.
ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய அவர் அடுத்த 2 நிமிடத்திலேயே பிராமிஸ் டேவிட் கொடுத்த பாஸை லாவகமாக கொண்டு சென்று கோலாக மாற்றி ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். அதன்பின்னர் இறுதிவரை இரு அணியினரும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.
