சில்லிபாயிண்ட்…

* அன்று எதிரி… இன்று தோழன்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வு அறிவித்துள்ளார். இவருக்கு ரன் மெஷின் விராட் கோலி வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘‘பல வருடப் பயணத்தில், வெறும் எதிரியாகத் தொடங்கி இன்று ஒரு நல்ல நண்பனாக மாறி இருக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதும், உங்களுக்கு எதிராக விளையாடுவதும் எனக்குக் கிடைத்த பெருமகிழ்ச்சி. ஆனால், எல்லாவற்றையும் விட நமது நட்பையும், கிரிக்கெட் குறித்தும் அதற்கு அப்பாலும் நாம் பகிர்ந்து கொண்ட பார்வைகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன்’’ என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

* தம்பியோ சரவெடி: அண்ணன் அதிரடி
ஐபிஎல்லில் தொடர் நாயகன் விருது வென்ற 15 வயது வைபவ் சூரியவன்ஷியின் அதிரடியை மறக்க முடியாமல் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்க, ‘நானும் மிரட்டுவேன்ல’ என்ற பாணியில் வெளுத்து வாங்குகிறார் அவரது தம்பி ஆசிர்வாத் சூரியவன்ஷி. பீகார் மாநிலத்தில் உள்ள தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமிக்காக விளையாடிய ஆசிர்வாத், பயிற்சிப் போட்டி ஒன்றில் 87 பந்துகளை சந்தித்து 103 ரன்கள் குவித்தார். இதில் 20 பவுண்டரிகள், ஒரு சிக்சரும் அடங்கும். இவரது வயது என்ன தெரியுமா? வெறும் 10 தான்… இப்போட்டியின் ஸ்கோர்போர்டை, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்து மகிழ்ந்திருக்கிறார் வைபவ்.

* லீக் போட்டிகளில் நெய்மார் இல்லை
உலக கோப்பை கால்பந்து குரூப் ‘எப்’ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணி, இன்று நடைபெறும் தனது முதல் லீக் ஆட்டத்தில் மொராக்கோவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மார், காயத்தில் இருந்து குணமடையாததால் விளையாடமாட்டார். இது குறித்து பயிற்சியாளர் அன்செலோட்டி கூறுகையில்,‘‘அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு நெய்மார் ஒரு சிறந்த முன்மாதிரி. அவரது அனுபவமும், வழிகாட்டுதலும் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நெய்மார் விரைவில் குணமடைய தீவிரமாக உழைத்து வருகிறார். அடுத்த வாரம் அவர் முழுமையான பயிற்சியில் ஈடுபடுவார் என்று நம்புகிறோம்’’ என்றார்.

Related Stories: