பிபா உலக கோப்பை கால்பந்து பிரேசில் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட மொராக்கோ: டிரா செய்து அபாரம்

நியூயார்க்: 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை தலா 4 அணி என 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. சி பிரிவில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நியூயார்க் மைதானத்தில் நடந்த போட்டில் 5 முறை சாம்பியனான 6வது ரேங்க் பிரேசில், 7வது ரேங்கில் உள்ள மொராக்கோவுடன் மோதியது.

பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கெண்டைக்கால் காயத்தால் ஆடவில்லை. ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே மொராக்கோ வீரர்கள் பிரேசில் தற்காப்பு அரணை தகர்த்து ஆதிக்கம் செலுத்தினர். 21வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சய்பரி கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார். இந்த கோலால் சுதாரித்து கொண்ட பிரேசில், 31வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. பிரேசிலின் முன்னணி வீரர் வினிசியஸ் ஜூனியர் எதிரணி தற்காப்பு வீரர்களை கடந்து பந்தை அபாரமாக கோலாக மாற்றி 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார். 2வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க மாறி மாறி போராடின. பிரேசில் அணியின் புதிய இத்தாலிய பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி சில மாற்று வீரர்களை களம் இறக்கினார்.

எனினும், மொராக்கோ கோல் கீப்பர் யாசின் போனோவின் சிறந்த தற்காப்பால் பிரேசிலின் கோல் வாய்ப்புகள் முறியடிக்கப்பட்டன. முடிவில் 1-1 என போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன. பிரேசில் அடுத்ததாக வரும் ஜூன் 19ம் தேதி ஹைதியையும், மொராக்கோ ஸ்கார்ட்லாந்தையும் எதிர்கொள்கிறது.

Related Stories: