தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் போதிய அளவு இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி

*மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தஞ்சாவூர் : தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர போதிய அளவு இருக்கைகள் இல்லாததால் அவர்கள் நடைமேடையில் அமரும் நிலை உள்ளது.

மேலும் நடைபாதைகளில் கடைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலைமை உள்ளது. எனவே சேதம் அடைந்த இருக்கைகளை சரி செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் சென்று வருகின்றனர்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக்கல்லூரி, பிள்ளையார்பட்டி, வல்லம், செங்கிப்பட்டி, ஒரத்தநாடு, அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சைக்கு பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் அதிகளவில் வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து பயன்படுத்துவர்.

இந்த நிலையில் பயணிகள் அமர்வதற்காக தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள இருக்கையில் போதிய அளவில் இல்லாததால் பொதுமக்கள் நடைபாதையில் அமர்ந்து பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் முதியோர்கள் போன்றவர்கள் மிகவும் சிரமத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: