வறண்டு கிடக்கும் கால்வாய் காய்ந்த புற்களை தேடி அலையும் கால்நடைகள்

*தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

குமாரபாளையம் : கால்வாய் பாசன பகுதிகள் வறண்டு கிடப்பதால், கால்நடைகள் காய்ந்த புற்களை தேடி அலைகின்றன. வறட்சி தாண்டவமாடுவதால், குடிநீர் தேவையை தீர்க்க மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் பத்து நாட்களுக்கு மட்டும் தண்ணீர் விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் பாசனப்பகுதியான குமாரபாளையம், பள்ளிபாளையம், இடைப்பாடி, தேவூர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. நெல் நடவுக்கு பிறகு இந்த பகுதிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. கோடை உழவு செய்ய கூட போதிய மழை இல்லை. தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவில் இல்லை.

இதனால் கால்வாய் பாசன பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் பாசன பகுதியில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லை. வறண்டு கிடக்கும் வயல்களில் ஆடுமாடுகள் காய்ந்து போன புற்களை தேடி அலைவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

மேட்டூர் அணையில் தற்போது 79 அடி தண்ணீர் உள்ளது. காவிரி ஆற்றில் குடிநீருக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் 10 நாட்களுக்கு மட்டும் 200 கன அடி நீரை வெளியேற்றினால், கால்வாய் பாசன பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கிணறுகளில் தண்ணீர் சேகரமாகிவிடும்.

இந்த நீரை கொண்டு கால்வாய் கரையோர பகுதிகளில் குடிநீர் தேவை தீர்க்கப்படும். கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் கிடைக்கும். எனவே தற்காலிகமாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கால்வாய் பாசன சங்க தலைவர் தட்டாங்குட்டை ரவி கூறுகையில், `கால்வாய் பாசனப்பகுதியில் கடும் வறட்சி தாண்டவமாடுகிறது. கிணறுகள், குட்டைகள் வறண்டு விட்டன. குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை கொடுக்க முடியாமல் விவசாயிகள் அல்லல்பட்டு வருகின்றனர். குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு 10 நாட்களுக்கு மட்டும் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: