பற்றாக்குறை, நஷ்டத்தை காரணம் காட்டி ஆவின் பச்சை பால் விற்பனையை குறைப்பதா?.. அன்புமணி கடும் கண்டனம்

 

சென்னை: பாமக தலைவர் அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 7.5 லட்சம் லிட்டர் பச்சை பாலாகும். ஆனால், தற்போது ஆவின் பச்சை பால் விற்பனை 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த சில நாள்களின் ஆவின் பச்சை பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது, உண்மையாக இருந்தால் அது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

ஆவின் பச்சை பாலின் உற்பத்தி செலவு லிட்டருக்கு ரூ.51 ஆவதாகவும், ஆனால் சந்தையில் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுவதால் லிட்டருக்கு ரூ.7 வரை இழப்பு ஏற்படுவதாகவும் இதை சமாளிக்க முடியாமல் தான் பச்சை பால் வணிகத்தை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பதாக கூறப்படுகிறது. இழப்பை காரணம் காட்டி மக்களால் அதிகம் விரும்பப்படும் பாலின் வணிகத்தை குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். தமிழ்நாட்டில் மிக அதிக மானியத்தில் விற்பனை செய்யப்படுவது ஆவின் பச்சை பால்தான்.

இந்த வகை பாலை தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.68 வரை விற்பனை செய்யும் நிலையில், ஆவின் நிறுவனம் ரூ.44க்கு விற்பனை செய்கிறது. இதனால் ஏற்படும் இழப்பை தாங்க முடியாமல்தான் பச்சை பால் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் முயன்று வருகிறது. இந்த திட்டத்தை கைவிட்டு, அதன் தடையற்ற வினியோகத்தை ஆவின் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: