திருப்பூர், ஜூன் 13: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பஸ் பாஸ், ரயில் பாஸ், வாகனம், செல்போன் என்பது உள்பட சலுகைகளுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இதுபோல் ஊன சதவீதம் குறித்து டாக்டர்கள் முன்னிலையில் மருத்துவ முகாமும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த முகாமில் அடையாள அட்டை பதிவு செய்யும் இடத்தில் சர்வர் கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதனால் தாமதம் ஏற்பட்டது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்’’ என்றனர்.
