திருப்பூர், ஜூன் 9: ஒடிசா மாநிலம் சியாம்சுந்தர்பூர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் திருப்பூர் கல்லாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளம்பெண்ணுடன் ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியை சேர்ந்தவர் மில்லு (22), என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மில்லு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பெண்கள் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
