சிறப்பறிந்து பயன்படுத்தி மகிழ்வோம்; மண், செப்பு, பித்தளை பாத்திரங்கள்: தமிழர் பாரம்பரிய அறிவியல் ரகசியங்கள்

 

பண்டை காலத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வழக்கத்தில் இருந்த பயன்பாட்டு பொருட்கள் பல இன்று அருகி போயின. தண்ணீர் சுட வைக்கும், நெல் வேகவைக்கும் கிடாரங்கள், பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் சருவம், பித்தளையால் ஆன சொம்பு, குடம், மூக்குப்பேணி, வெற்றிலை தட்டம், தாம்பாளங்கள்,சருவச்சட்டிகள் என்பன இன்றைய பயன்பாட்டில் இல்லாது போயின. சமைத்த கறி தாங்கிய பாத்திரங்களாக தூக்குச்சட்டி, பித்தளை பாத்திரங்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. தூக்குச்சட்டியானது மொத்தம் 4 அல்லது 5 கிண்ணங்களை ஒருங்கே கொண்டு விளங்கியது. ஆயினும் காலப்போக்கில தூக்குச்சட்டியானது அலுமினியம் மற்றும் எவர் சில்வரால் செய்யப்பட்டதாக காணப்படுகின்றன.

இன்று கறிகளை சூடாக வைத்து ‘சூடு பாதுகாக்கும்’ பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பாத்திரங்களின் வருகையால், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களின் பயன்பாடு படிப்படியாக வழக்கொழிந்து போயின. இவை தவிர வெற்றிலை தட்டம், சுண்ணாம்பு கிண்ணம், பித்தளை தட்டங்கள், பாக்கு வெட்டி, பாக்கு இடிக்கும் உரல், குத்துவிளக்கு, கைவிளக்கு, தாம்பாளங்கள் போன்ற பொதுவான பொருட்கள்கூட இன்று வழக்கொழிந்து போயின. பித்தளை பாத்திரங்கள் எடை கூடியவை. சுத்தம் செய்ய கடினமானவை. ஆனால் அலுமினியம் என்னும் மென் உலோகம் எளிதில் சுத்தம் செய்ய கூடியது. எடை குறைந்தவை.

பல அளவுகளில், வடிவங்களில் சந்தையில் மலிவான விலைகளில் வாங்க கூடியது. இது பித்தளையின் பயன்பாட்டை அருகிப்போக செய்தது எனலாம். மேலும் பித்தளையாலான இட்லிப்பானை, இருந்தபடி வேலை செய்ய கூடிய சமையல் அறைப்பலகை, அரிவாள், இருந்தபடி வேலை செய்ய கூடிய தேங்காய் திருவலை போன்றவற்றின் பயன்பாடு கணிசமான அளவு வழக்கொழிந்து விட்டன. முன்பு பானையில் குடிநீர் தேவைக்கு நீரை சுடவைத்து, குவளைகளில் சேமித்து சேகரித்து வைப்பது வழமையாகும். ஆயினும் இன்று மின்னியல் சுத்திகரிப்பு உபகரணங்களே இத்தேவைக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் களிமண்ணால் உருவான மண்பாண்டங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். அக்காலத்தில் வீடுகள்கூட களிமண்ணால் கட்டப்பட்டு அதில் வாழ்ந்தும் உள்ளனர். களிமண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகள் தனிச்சுவை தரும். மேலும் அவ்வாறு செய்யப்பட்ட உணவுகளில் மருத்துவகுணம் நிறைந்து இருக்கும். மண்பாண்டங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர்.

மண்பானைகளில் சேமித்து வைத்து உபயோகிக்கும் தண்ணீர் சுவையாகவும், குளிர்ந்தும், இயற்கை மாறாமல் இருக்கும். இதனால்தான் மண்பானைகளை ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என்று சொல்கிறோம். தோண்டி, குடம், தோசைக்கல், இட்லிப்பானை, குளிர்சாதன பெட்டி, சித்திரப்பானை, காய்கறிப்பானை, மண்சட்டி, கலையம், விளக்கு, முகூர்த்த பானை, பூத்தொட்டி, அடுப்பு, அகல் மற்றும் பறவைகள் கூண்டு என்று பலவகையான பொருட்களையும் இந்த களிமண்ணால் உருவாக்கப்படுகிறது. அக்காலத்தில் வீட்டில் அரிசி தானியங்களை சேமிப்பதற்கு மிகப்பெரிய அளவில் மண் தொட்டிகள் (குதிர்) உருவாக்கப்பட்டு, அதில் தானியங்களை சேகரித்து வந்தனர்.

மண்பாண்ட சமையல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையை கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்கு கெடாமலும், சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் சமைத்த உணவு அமிலத்தன்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாது. இவ்வளவு அருமை,பெருமைகள் இருந்தும் இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை. மண்பாண்டம் தவிர்த்து அந்த காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர் பயன்படுத்தினர்.

இவற்றில் வெள்ளி பாத்திரம் உடலுக்கு ளிர்ச்சியை தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வரா. ‘இளைத்தவனுக்கு இரும்பு பாத்திரம்’ என்பது அந்த கால அறிவுரை. எஃகு, உருக்கு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தை போக்கும். ஈய சொம்பில் ரசம் வைத்து சாப்பிடும்போது வாசனை ஊரை கூட்டும்.

அந்த காலங்களில் நம் முன்னோர் செம்பு குடங்களில்தான் தண்ணீரை பிடித்து வைப்பர். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்தி கொண்டு வர செம்புக்குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு
ஒரு செம்புத்தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். செம்பு பாத்திரத்தில் 24 மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்து பார்த்ததில், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று தெரியவந்துள்ளது. கிணத்தில் கிடைக்கும் தண்ணீர், செம்பு குடத்துக்கு போனதும் ‘மினரல் வாட்டர்’ மாதிரி அருமையாக மாறிவிடுகிறது. சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்பு சத்து தேவை.

செப்பு பாத்திரம் ‘இ-கோலை’ எனும் பாக்டீரியாக்களின்ன் முதல் எதிரி. செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கி வைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு வெள்ளி தட்டில் உணவு எடுத்து கொள்வது நல்லது. வெள்ளித்தட்டில் உண்பது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சூடான உணவுகளை வெள்ளி பாத்திரத்தில் வைக்கும்போது அதில் உள்ள பாக்டீரியல் எதிர்ப்பு பண்புகள் உணவில் கலந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அதனால்தான் குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணத்தில் சோறு ஊட்டுவதும், வெள்ளி சங்கில் பால், மருந்து புகட்டுவதும் பயன்பாட்டில் உள்ளது. கண் நோய்கள், அசிடிட்டி, உடலில் உண்டாகும் எரிச்சல் போன்றவை குணமாக வெள்ளி உதவுகிறது. வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பது பாக்டீரியாக்கள் எதுவும் இல்லாமல் சுத்திகரிக்கிறது. வெள்ளி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. சமையலுக்கு என்று கிடைக்கும் தரமான வெள்ளை பீங்கான் பாத்திரங்கள் குழம்பு, கூட்டு போன்றவை வைக்க எளிதானவை. பீங்கான் என்பது அதிக வெப்பநிலையில் களிமண்ணை எரிப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இதில் ரசாயன கலப்பு எதுவும் இல்லாததால் உடலுக்கு தீங்கு எதுவும் விளைவிக்காது. ஊறுகாய், உப்பு, புளி போன்றவற்றை பீங்கான் ஜாடிகளில் வைக்கலாம். மண் கலன்கள் சமைப்பதற்கும், சாப்பிடும் உணவை வைப்பதற்கும் ஏற்றவை. மண் பாத்திரங்களை அதன் மண் வாசனை போகும் வரை மாற்றி மாற்றி கழுவியும், ஊறவைத்தும், காய வைத்தும், பிறகு சில நாட்கள் சமைத்த உணவுகளை அதில் வைத்து பயன்படுத்தி பழக்க வேண்டும். வாங்கியவுடன் சமைக்க ஆரம்பித்தால் உணவில் மண் வாசனை வரும். தினம் ஒ முறை சுத்தம் செய்து சில நாட்கள் தண்ணீர் வைத்து குடித்து பின் சமைக்கலாம்.

ஸ்டீல் பாத்திரங்கள் வலுவானவை, பளபளப்பானவை, சுத்தம் செய்வது எளிது. பயன்படுத்தவும் எளிதானவை. நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை. வெண்கல பாத்திரங்களுக்கு ஈயம் பூச வேண்டிய அவசியம் கிடையாது. இவற்றை புளியும், சாம்பலும் கொண்டு அழுத்தி தேய்க்க தங்கம்போல் பளபளக்கும். அந்த காலத்தில் சோறு வடிக்க வெண்கல பானைகள் பயன்பாட்டில் இருந்தன. வெண்கலம், பித்தளை போன்றவற்றில் சமைத்து சூடாக பரிமாறிய பின் உணவை பாத்திரத்தில் இருந்து மாற்றிவிட வேண்டும். அலுமினிய பாத்திரத்தில் சமைப்பது மிகவும் ஆபத்தானது. இதில் சமைக்கும் பொழுது அலுமினியத்தில் உள்ள ரசாயனங்கள் உணவில் கலந்து விஷமாகிவிடும்.

பித்தளை பாத்திரங்களை அடுப்பில் வைத்து சமைக்கும் பொழுது ஈயம் பூசித்தான் சமைக்க வேண்டும். மற்ற பயன்பாடுகளுக்கு ஈயம் பூச வேண்டிய அவசியமில்லை. முன்பெல்லாம் திருமண வீடுகளில் பெரிய அண்டாக்கள், தவலைகளை வைத்து சோறு வடிக்க ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களும்தான் பயன்பாட்டில் இருந்தன. 3, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பித்தளை பாத்திரங்களை ஈயம் பூசி பயன்படுத்த வேண்டும்.
கல் சட்டிகள் மாக்கல்லால் தயாரிக்கப்படுகின்றன. அதில் செய்த கீரை, வற்றல் குழம்பு, சாம்பார் ஆகியவை மிகவும் சுவையாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புளி அதிகம் உபயோகிக்கும் புளிக்காய்ச்சல் இதில்தான் செய்யப்படும்.

கல்சட்டிகள் சமமாக, சீராக வெப்பத்தை உட்கிரகிக்கும் தன்மை வாய்ந்தவை. இதில் சமைக்கப்படும் எந்த உணவும் வினைபுரிந்து ரசாயன மாற்றம் அடையாததாலும், சீராக வெப்பம் அடைவதாலும், அதன் இயல்பான சுவையுடன் உள்ளது. மேலும் அடுப்பில் இருந்து இறக்கியபின் வெகுநேரம் சூட்டோடு இருக்கும் தன்மை வாய்ந்தது. நம் முன்னோர்கள் உணவோடு சேர்த்து, சமையல் பாத்திரங்கள் மூலம் உணவின் சுவையை அதிகரிக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், கூட முடியும் என்பதை அறிந்திருந்தனர்.

இப்படி உடல் ஆரோக்கியத்தை தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய பாத்திரங்களை பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, நம் முன்னோர் பயன்படுத்திய பாத்திரங்களை பயன்படுத்த ஆரம்பிக்கலாமே! நமது உடல்நலத்துக்கு நாம் கொடுக்கும் விலை நமது நேரத்தில் சிறிதளவுதான். நமது பாரம்பரியத்தின் சிறப்பை உணர்ந்து பயனடைவோம்.

Related Stories: