உலக ஃபார்மசியாக ஏழை நாடுகளால் கொண்டாடப்படும் இந்தியாவுக்குத்தான் இந்த நிலை…
ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்…
எத்தனையோ பெயர்கள் இந்தியாவுக்கு இருந்தாலும் ‘உலகத்தின் ஃபார்மசி இந்தியா’ எனும் பெயர் நம் நாட்டை கடவுளுக்கு நிகரான பெயராக மாற்றியிருப்பது எல்லா இந்தியர்களுக்குமான பெருமை. அந்தப் பெருமையைத்தான் தகர்க்க முயற்சிக்கின்றன உலகளாவிய சில மருத்துவ கார்ப்பரேட்டுகள்.
இந்தியா ஏன் உலகத்தின் ஃபார்மசி?
உலகளவில் சப்ளை செய்யப்படும் 30 சதவீத தடுப்பூசி மருந்துகள் இந்தியாவிலிருந்து செல்கிறது. எய்ட்ஸ் மருந்தில் 95 சதவீதம் சப்ளை செய்யப்படுகிறது. காசநோய்க்கான மருந்தில் 36 சதவீதம். வைரஸ் தொற்றுக்கான எதிர்ப்பு மருந்தில் சுமார் 80 சதவீதம் சப்ளை. ஹெபடைடிஸ் சி எனும் கல்லீரல் தொற்றுக்கான மருந்தில் 90 சதவீதம் சப்ளை. இதுதான் இந்தியாவின் உலக ஃபார்மசிஎனும் பெயருக்கான காரணம். எப்படி இது சாத்தியமானது?
பொதுவாக ஒரு மருந்துக்கான கண்டுபிடிப்பில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன. இந்த நாடுகள் ஒரு நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்ததும் அப்படியே அதைச் சந்தைக்குக் கொண்டுவரமுடியாது.
அந்த மருந்து கண்டுபிடிப்புக்கான சோதனை செய்யப்படவேண்டும். சோதனை செய்வதற்கு முன் அந்த மருந்து ஃபார்முலாவை பதிவு செய்யவேண்டும். இந்த பதிவைத்தான் ‘பேட்டன்ட்’ என்பார்கள். அதாவது காப்பிரைட் போன்றது இது. இந்த காப்பிரைட் உரிமை 20 வருடங்களுக்கு கொடுக்கப்படும். 20 வருடங்கள் காலாவதியானதும் எவரும் இந்த மருந்தை தயாரித்துக்கொள்ளலாம்.
இந்த மருந்துகளுக்குப் பெயர்தான் ‘ஜெனரிக் டிரக்’ என்பது. இதை ‘இனம்சார்’ அல்லது ‘நகல்’ அல்லது பொது மருந்துகள் என்கிறார்கள். இந்த ஜெனரிக் மருந்துகளில்தான் இந்தியா கெத்து காட்டுகிறது. உலகத்தின் ஃபார்மசி எனும் பெயரை வாங்கியிருக்கிறது. இந்தப் பெயரைக் கெடுக்கத்தான் முயற்சிகள் நடைபெறுகிறது.
ஏன் இப்படிப்பட்ட முயற்சி நடக்கிறது?
பொதுவாக ஒரு நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கவேண்டும் என்றால் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும். ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அது பேட்டன்ட் உரிமைக்குள் வந்துவிடும்.
முன்பே கூறியபடி இந்த பேட்டன்ட் உரிமை 20 வருடங்களுக்குத்தான்.
இந்த 20 வருடத்துக்குள் அந்த மருந்துக் கண்டுபிடிப்பை சோதனை செய்யவேண்டும். சோதனையின்போது அதன் முறைகள், விளைவுகள், பக்கவிளைவுகளை எல்லாம் பட்டியலிடவேண்டும். இதைத் தரவுகள் என்பார்கள். இந்தத் தரவுகளை வைத்துதான் அந்த மருந்தை விற்பதா அல்லது முடக்குவதா என்பதை ஒரு நாடு முடிவுசெய்யும்.
ஒருவேளை விற்கலாம் என்றால் தரவுகள் பேட்டன்ட் உரிமைக்கான கோப்புகளுடன் இணைந்துவிடும். இந்தச் சோதனைகள் முடியவே சிலருக்கு பல வருடங்களாகலாம்.
மருந்து உரிமைக்கான 20 வருடத்தில் 8ல் இருந்து 12 வருடங்கள் வரை சோதனைக்கே சென்றால் அந்த மருந்தை விற்பனை செய்யும் காலம் வெறும் 8ல் இருந்து 10 வருடங்களாகவே இருக்கும்.
இது தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக பல மருந்து கண்டுபிடிக்கும் நாடுகள் பல காலமாக குறைப்பட்டுக் கொண்டிருந்தன.
‘‘ஒரு மருந்தை கண்டுபிடிப்பதற்கான செலவு பலகோடிகளில் இருக்கும் என்பது உண்மை. இதை உரிமை பெற்று, சோதனை செய்து விற்கும் காலம் மிகக் குறுகியதாக இருக்கும் என்பதும் உண்மைதான். ஆனால், மேற்குலகில் விற்கப்படும் மருந்துகளின் விலைக்கும் இந்தியாவில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளின் விலைக்கும் பெரும் வித்தியாசமுள்ளது.
ஆம். ஏணி வைத்தால்கூட எட்டமுடியாது. ஒருவேளை மருந்துக்கான உரிமை 20 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கப்பட்டால் இந்திய ஜெனரிக் மருந்துகளின் விலை நிச்சயமாக எகிறக்கூடும்…’’ என ராஜ் பாபு சொல்ல, இந்தியா போன்ற நாடுகள் மேற்குலக நாடுகள் போல மருந்துகளைக் கண்டுபிடிக்கமுடியாதா என்று கேட்டோம்.
‘‘இந்தியாவின் ஜெனரிக் மருந்துகளுக்கான மூலப்பொருட்களில் முக்கால்வாசி சீனாவில் இருந்துதான் வருகிறது. இந்த நிலையில் ஒரிஜினல் மருந்துகளை இந்தியா கண்டுபிடிப்பது எட்டாக்கனிதான். ஏனெனில் ஒரிஜினல் மருந்துகளைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை.அப்படியிருக்க நம் நாடான இந்தியா, ‘உலகின் ஃபார்மசி’யாக இருப்பதில் பெருமையும் சிறுமையும் கலந்தே உள்ளது. பெருமை, இந்தியா ஜெனரிக் மருந்து உற்பத்தியில் உச்சத்தில் இருப்பது. சிறுமை, இந்தியா மருந்துக் கண்டுபிடிப்பில் பூஜ்ஜியமாக இருப்பது.
ஜெனரிக் மருந்து உற்பத்தியிலும் இந்தியாவுக்கு சில சங்கடங்கள் உள்ளன. உதாரணமாக, இந்திய ஜெனரிக் மருந்து உற்பத்தியில் இந்திய மருந்து உற்பத்தியாளர்களுக்கு குறைந்த லாபம்தான் கிடைக்கிறது.
மருந்து உற்பத்தியாளர்களுக்கு 1970களில் இந்தியா கொடுத்த ஊக்கம் மற்றும் ஊக்கத்தொகைதான் மருந்து உற்பத்தியாளர்களை இந்தத் தொழிலில் கோலோச்ச வைத்தது.
ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பது வேண்டுமென்றால் பணக்கார மேற்குலக நாடுகளாக இருக்கலாம். ஆனால், அந்த மருந்தை மலிவாகத் தயாரித்து உலகம் முழுக்க விற்பனை செய்வதால் உலக மக்கள்தான் நன்மை அடைகிறார்கள்.’’ என்கிறார் ராஜ் பாபு.
டி.ரஞ்சித்
