‘தங்க நிறுவனத்தின் தகிடுதத்தம்’ இந்திய பங்குச்சந்தையை உலுக்கிய ரூ.15 லட்சம் கோடி முறைகேடு

* வருவாயை அதிகரித்து காட்டி ராஜேஷ் எக்ஸ்போர்ட் மெகா மோசடி; செபி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்: கடும் அதிர்ச்சியில் உறைந்த முதலீட்டாளர்கள்

இந்தியாவின் மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்று, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ். இதன் தலைவர் ராஜேஷ் மேத்தா. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், ஒரு மிகப்பெரிய முறைகேடு அம்பலமானதின் மூலம், இந்திய பங்குச்சந்தை வரலாற்றில், ஏறக்குறைய, பங்குச்சந்தை மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தா பேசப்பட்டதற்கு இணையான பரபரப்பான சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த நிறுவனம் காட்டிய வருவாயின் அளவு தான், பரபரப்பின் உச்சத்துக்கு காரணமாகியுள்ளது.

இந்த நிறுவனம் கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரை ரூ.15.15 லட்சம் கோடி வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது. செபியின் முதற்கட்ட விசாரணையின்படி, 2021 முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் குழுமம் அறிவித்த வருவாயில் சுமார் ரூ.15.15 லட்சம் கோடியானது சரியான ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை என்று செபி தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகை, பல நாடுகளின் ஆண்டு ஜிடிபியை விடவும் அதிகம் என்பதால், இந்த விவகாரம் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாயில் 97 முதல் 99 சதவீதம் வரை அதன் வெளிநாட்டு துணை நிறுவனங்களின் மூலம் பெறப்பட்ட பங்களிப்பாகக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த வருவாயை உறுதிப்படுத்தும் வகையில் நிதி ஆவணங்கள், பரிவர்த்தனைகள் மற்றும் துணை நிறுவனங்களின் முழுமையான கணக்குகள் விவரம் மக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு போதுமான அளவில் வெளிப்படுத்தப்படவில்லை என்பது செபியின் பிரதான குற்றச்சாட்டாகும்.

குறிப்பாக, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வால்காம்பி நிறுவனத்தின் வருவாய் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் குழுமம் அறிவித்த மாபெரும் வருவாய் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் இருப்பது செபி விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. மேலும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்சின் துணை நிறுவனங்கள் உண்மையில் எவ்வளவு வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், நிறுவனத்தின் புரமோட்டர்களுடன் தொடர்புடைய கணக்குகள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதி மாற்றங்கள் நடைபெற்றதாகவும், சில தொடர்புடைய பரிவர்த்தனைகள் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை என்றும் செபி குற்றம் சாட்டியுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிறுவன நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்து சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.

இந்த விவகாரத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வால்காம்பி நிறுவனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்தை வால்காம்பிதான் கவனித்து வருகிறது. இந்த நிறுவனத்தை ஓராண்டுக்கு முன்புதான் ராஜேஷ் எக்ஸ்போர்ட் கையகப்படுத்தியது. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் முக்கிய செயல்பாட்டு நிறுவனமாக வால்காம்பி கூறப்பட்டிருந்தாலும், அதன் தனிப்பட்ட கணக்குகளில் காணப்படும் வருவாய் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட் குழுமத்தின் அறிவிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக செபி சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், உண்மையில் வருவாய் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், நிறுவனத்தின் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட சில பெரிய அளவிலான விற்பனை மற்றும் கொள்முதல் பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. சில பரிவர்த்தனைகள் உண்மையாகவே மேற்கொள்ளப்பட்ட வணிக நடவடிக்கைகளா அல்லது பொய் கணக்கான என்பது குறித்தும் செபி தரப்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பொய்யான கணக்குகள் மூலம் தான் நிறுவனத்தின் வர்த்தக அளவை செயற்கையாக உயர்த்திக்காட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தை செபி முன்வைத்துள்ளது.

மேலும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர், பங்குதாரர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் பரிவர்த்தனைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில பரிவர்த்தனைகள் தொடர்புடைய ஆதாரங்கள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், இந்த நிறுவன பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது.

இதுமட்டுமின்றி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பிற துணை நிறுவனங்களின் வருவாயையும், அதன் மூலம் ஈட்டப்பட்டதாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் காட்டிய வருவாய்க்கும் இடையே பெரிய அளவில் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட துணை நிறுவனம் அப்படியொரு வருவாயே ஈட்டவில்லை என்று செபி விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், அதனை தனது வருவாயாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் காட்டியது என்பது மிகப்பெரிய மர்மமாக நீடிக்கிறது.

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ரூ.1,035 கோடி முதலீடும் செபியின் கவனத்தை ஈர்த்துள்ளது. செபியின் இடைக்கால உத்தரவின்படி, இந்த முதலீடுகள் உண்மையில் மேற்கொள்ளப்பட்டனவா? அவற்றின் மதிப்பு சரியாக கணக்கிடப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்களை நிறுவனம் சமர்ப்பிக்கத் தவறியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த முதலீடுகளின் இருப்பு மற்றும் மதிப்பீடு குறித்தும் செபி சந்தேகம் எழுப்பியுள்ளது. தங்கச் சுரங்க முதலீடுகள் தொடர்பான போதுமான ஆதாரங்கள் இல்லாததால், நிறுவனத்தின் சொத்து மதிப்பு மற்றும் நிதி அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. செபியின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த மற்றொரு முக்கிய அம்சம், அப்லுயன்ஸ் ஷேர்ஸ் மற்றும் ஸ்டாக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளாகும்.

செபி தகவல்படி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் அப்லுயன்ஸ் நிறுவனத்துடன் சுமார் ரூ.11,487 கோடி மதிப்பிலான விற்பனை மற்றும் ரூ.11,488 கோடி மதிப்பிலான கொள்முதல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் விசாரணையின் போது இத்தகைய பரிவர்த்தனைகள் எதுவும் தங்களுக்கும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கும் இடையே நடைபெறவில்லை. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் தங்கள் வாடிக்கையாளரே அல்ல. எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் நடைபெறவில்லை என அப்லுயன்ஸ் நிறுவனம் தெரிவித்ததாக செபி கூறுகிறது.

இந்த மோசடிகளை தொடர்ந்து ராஜேஷ் மேத்தாவும், ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனமும் பங்குச்சந்தையில் ஈடுபடுவதற்கு செபி தடை விதித்ததுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த மெகா முறைகேடு முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த மெகா மோசடியால் அப்பாவி பங்கு முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுஒரு புறம் இருக்க, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ளு் நிறுவனத்தில் 10.8 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

பாலிசிதாரர்களின் பிரீமியம் பணம் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவன பங்கு மதிப்புகள் சரிவு, எல்ஐசியை மட்டுமின்றி, அதில் பிரீமியம் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு செபி விசாரணையில் உள்ள நிலையில், இதனை ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மறுத்துள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மோசடி அளவை பொருத்தவரை இது இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத முறைகேடாக இருக்கும் என்பதை சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

* பங்கு மதிப்பு 80 சதவீதம் சரிவு
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 81 சதவீதம் சரிந்துள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. முறைகேட்டால் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட செபி இடைக்கால தடைவிதித்த உடனேயே அந்த நிறுவன பங்குகள் 5 சதவீத லோயர் சர்க்யூட்டை எட்டின. இந்த நிறுவன பங்கு கடந்த சில ஆண்டுகளாகவே பாதிப்பை அடைந்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்கின் மதிப்பு 82 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. மேலும், அதன் வரலாற்று உச்ச விலையுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலை மிகவும் குறைவு. நிறுவனத்தின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் எதிர்கால செயல்திறன் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரித்ததே இந்த சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செபியின் நடவடிக்கை முதலீட்டாளர்களிடையே அச்சத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

* 5 ஆண்டுகளாக அம்பலமாகாதது எப்படி? அடுக்கடுக்காக எழும் கேள்விகள்
* ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இந்த மெகா முறைகேடு விவகாரம் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது,
* சித்தரித்து காட்டப்பட்ட ரூ.15 லட்சம் கோடி என்ற மெகா வருவாய் அளவு இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாதது எப்படி?
* தணிக்கை செய்த ஆடிட்டர் அல்லது தணிக்கை நிறுவனம் ஒன்று கூட இதனை கண்டுபிடிக்கவில்லையா?
* ஒரு பங்குதாரர் 2024 மார்ச் மாதம் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த விசாரணையை செபி துவக்கியுள்ளது. அதுவரை இந்த விவகாரத்தை செபி கண்டுகொள்ள தவறியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
* எல்ஐசி போன்ற நிறுவன முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்தது எப்படி? இந்த முடிவை எடுப்பதற்கான ஆய்வு நடைமுறைகள் என்ன?

* 2023ம் ஆண்டு முதல் முதலீட்டாளர்களுக்கு ரூ.12,725 கோடி இழப்பு
செபியின் தடையை தொடர்ந்து, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்கு மதிப்புகள் முந்தைய நாள் முடிவு விலையான ரூ.110.15லிருந்து 5 சதவீதம் சரிந்து, நேற்றைய குறைந்தபட்ச விலையான ரூ.104.65ஐ எட்டியது. மும்பை பங்குச் சந்தையில் சுமார் 3.35 லட்சம் பங்குகள் விற்பனைக்கு காத்திருந்தன. தேசிய பங்குச் சந்தையில் மேலும் 20.61 லட்சம் பங்குகள் விற்பனைக்கு இருந்தன. தேசிய பங்குச் சந்தை தரவுகளின்படி, நடப்பு 2026ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 42 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 49 சதவீதமும், கடந்த 3 ஆண்டுகளில் 82 சதவீதமும், 5 ஆண்டில் 81 சதவீதமும் சரிந்துள்ளது.

இந்த நீண்டகால சரிவின் விளைவாக, 2026 ஏப்ரல் 2ம் தேதி பங்கின் விலை வெறும் ரூ.80.11 ஆகக் குறைந்தது. அப்போது நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.2,365.33 கோடி மட்டுமே. இதற்கு மாறாக, 2023 பிப்ரவரி மாதத்தில் இந்த நிறுவன பங்கு அதன் வரலாற்று உச்சமான ரூ.1,028.40 என்ற விலையை எட்டியிருந்தது. அந்த உச்சநிலையிலிருந்து பின்னர் ஏற்பட்ட சரிவு காரணமாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் ரூ.27,999.21 கோடி அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக செபி கணக்கிட்டுள்ளது.

இந்த சந்தை மதிப்பு இழப்பில், பொதுமக்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் வைத்திருந்த பங்குகளின் விகிதத்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பொது முதலீட்டாளர்கள் சுமார் ரூ.12,725.53 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்திருக்கலாம் என செபி தெரிவித்துள்ளது.

* ரூ.509 கோடி கடன் பாக்கி கனரா வங்கிக்கு சிக்கல்
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செபி விசாரணை வளையத்துக்குள் வந்துள்ள நிலையில், நிறுவனத்தின் மோசடி விவகாரத்தால் கனரா வங்கிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் கனரா வங்கி ரூ.509 கோடி கடன் வழங்கியுள்ளது. இது, வராக்கடனாக மாறும் அபாயத்தில் உள்ளது.

இந்த கடன் தொகையை மீட்டெடுக்கும் முயற்சியில் கனரா வங்கி இறங்கியுள்ள நிலையில், நிறுவனத்தின் முறைகேடு இதற்கு முட்டுக்கட்டையாக ஆகும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாங்கிய கடனையே அடைக்க முடியாத நிறுவனம், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வருவாயை காட்டியிருப்பது, மேலும் வங்கிகளில் இந்த வருவாயை காட்டி கடன் பெறும் முயற்சியா என்ற சந்தேகங்களும், சந்தை நிபுணர்கள் மற்றும் வங்கியாளர்கள் தரப்பில் எழுப்பப்படுகின்றன.

* குஜராத் மாடல் இதுதானா?
ராஜேஷ் மேத்தா 1964ம் ஆண்டில் குஜராத்தில் பிறந்தவர். ஆரம்ப காலக்கட்டத்தில் சென்னையில் இருந்து வெள்ளி நகைகளை வாங்கிச் சென்று ராஜ்கோட் உட்பட குஜராத்தின் பல பகுதிகளில் உள்ள நகை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். பின்னர், ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தை 1989ம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கினார். பின்னர் சர்வதேச அளவில் தங்க வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.

இதைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியலில் இவரது நிறுவனம் இடம் பெற்றது. தற்போது இந்த புதிய முறைகேடு மூலம், மோசடி செய்த குஜராத் தொழிலதிபர்கள் வரிசையில் இவரும் இடம் பெற்றுள்ளார் என்கின்றனர் சந்தையாளர்கள்.

இந்திய வங்கிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்து விட்டு தலைமறைவான வின்சம் டயமன்ட்ஸ் முன்னாள் தலைவர் ஜதின் மேத்தா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடிக்கு மேல் மோசடி செய்து தலைமறைவான நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி, 1992ல் வரலாறு காணாத பங்குச்சந்தை ஊழலில் ஈடுபட்டு பிடிபட்ட ஹர்ஷத் மேத்தா, 2001ல் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்ட பங்குச்சந்தை வர்த்தகர் கேத்தன் பரேக் ஆகியோரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* நிறுவன கணக்கில்முரண்பாடுகள்
* ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2020-21 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடையில் சுமார் ரூ.15.45 லட்சம் கோடி ஒருங்கிணைந்த வருவாயை ஈட்டியதாக அறிவித்திருந்தது.
* ஆனால் அதே காலகட்டத்தில், இந்தியாவில் மட்டும் அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட வர்த்தகம் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.26,500 கோடி மட்டுமே.
* ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் முக்கிய செயல்பாட்டு நிறுவனமான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வால்காம்பி ரூ.3,027 கோடி வருவாய் ஈட்டியதாக குறிப்பிட்டிருந்தது.
* 2023 ஆம் ஆண்டில் வால்காம்பி நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட வருவாய் சுமார் ரூ.543 கோடி மட்டுமே.
* இதுபோல் குளோபல் கோல்டு ரிபைனரீஸ் மூலம் சுமார் ரூ.2.93 லட்சம் கோடி வருவாய் கிடைத்ததாக அறிவித்திருந்தது. ஆனால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் குழுமம் சுமார் ரூ.2.81 லட்சம் கோடி ஒருங்கிணைந்த வருவாய் அறிவித்திருந்தது.
* இந்த தொகைக்கு இடையிலான மிகப்பெரிய முரண்பாடுகளே செபியின் சந்தேகத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

* எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.3,000 கோடி இழப்பு?
சமீபத்திய தகவல்களின்படி, எல்ஐசி நிறுவனத்துக்கு ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸில் 10.8 சதவீத பங்கு உள்ளது. அதாவது, சுமார் 3.19 கோடி பங்குகள் (3,18,75,887) உள்ளன. தற்போதைய மதிப்பில், அதாவது பங்கு மதிப்பு ரூ.104 மற்றும் ரூ.110 இடையே இருந்தபோது, இந்த நிறுவனத்தில் எல்ஐசியின் மொத்த முதலீட்டு சந்தை மதிப்பு சுமார் ரூ.330 முதல் ரூ.350 கோடி மட்டுமே. அதேநேரத்தில் கடந்த 2023 பிப்ரவரியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்கு வரலாற்று உச்சமாக ரூ.1,028 வரை சென்றது.

அப்போது எல்ஐசி வைத்திருந்த 3.19 கோடி பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.3,277 கோடி கோடிக்கு மேல் இருந்திருக்கலாம். இதன்படி பார்த்தால் எல்ஐசிக்கு இழப்பு ரூ.2,943 கோடிக்கு மேல் இருக்கலாம் என உத்தேசமாக மதிப்பிடுகின்றனர் சந்தை நிபுணர்கள். எனினும், எல்ஐசி ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகளில் எப்போதிருந்து முதலீடு செய்தது என்ற விவரம் வெளியாகவில்லை. இது சந்தை மதிப்பு சரிவை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது.

Related Stories: