கோடைக்காலம் என்றாலே நம்ைம அறியாமல் நமக்குள் ஏதோ ஒரு பீதி தொற்றிக்கொள்கிறது. கோடை வெயிலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? சுட்ெடரிக்கும் அக்னி நட்சத்திர காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்பது உள்ளிட்ட கேள்விகள் ஒவ்வொருவரிடமும் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கோடை வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாகவே உள்ளது.
இங்குள்ள மக்கள், தங்களது உடலையும் வாழ்க்கை முறையையும் சுட்டெரிக்கும் வெயிலைத் தாங்குவதற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் சருமபாதிப்புகள் சார்ந்த மருத்துவ நிபுணர்கள். வானிலை எப்படி இருந்தாலும், சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். கோடைக்காலத்தில் வெப்பநிலை காரணமாக தோல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கோடை காலத்தில் காற்றில் ஈரப்பதம் இல்லாது போவது, விரைவில் வியர்வை ஆவியாதல் போன்ற பிரச்னைகளால் சருமம் எண்ணெய் பசை மிக்கதாக மாறுகிறது என்கின்றனர் அவர்கள்.
இதுகுறித்து கோடைக்கால நோய் பாதிப்பு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: தொடர்ந்து வெயிலில் இருப்பதால் முகத்தில் மெலஸ்மா என்னும் சாம்பல்-பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றலாம். கோடைக்காலத்தில் வியர்வை சருமத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் எண்ணெய்களுடன் இணைந்து, சருமத்தின் துளைகளை அடைத்து விடும். இதனால் முகப்பரு வெடிப்புகள் ஏற்படலாம். உடலில் உள்ள ஒவ்வொரு முடியும் போலிகுலிடிஸ் எனப்படும் ஒரு திறப்பிலிருந்து வளரக்கூடியதாகும்.
இந்த போலிகுலிடிஸ் பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட மயிர்க்கால்கள் பருக்கள் போல இருக்கும். வியர்வை சுரப்பிகள் அடைபடுவதால், வெப்ப வெடிப்பு பிரச்னைகள் ஏற்படுகிறது. வியர்வை வெளியேற முடியாததால், அது சருமத்தின் கீழ் உருவாகி, ஒரு சொறி மற்றும் சிறிய, அரிப்பு புடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமன்றி கோடைக்காலத்தில் வியர்வை காரணமாக தோல் நோய்கள், தொற்றுகள் மற்றும் அதிக வெப்பம் காரணமாக தோல்களில் தடிப்புகள் போன்றவை பலருக்கு ஏற்படுகிறது.
சிலருக்கு அதிக சூரிய ஒளி காரணமாக முகம், முதுகு, கைகள் மற்றும் கழுத்து போன்ற பகுதிகளில் தோலில் தடிப்புகள் ஏற்படலாம். இதன் காரணமாக அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கு முறையான சிகிச்சை பெறாவிட்டால் இந்த தடிப்புகள் உடல் முழுவதும் பரவிவிடும். காற்று உள்ளே செல்லாத இடுப்புப் பகுதி, அக்குள் போன்ற துணிகளால் மூடப்பட்ட பகுதிகளில் வியர்வை எப்போதும் இருக்கும்.
இதன் காரணமாக இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று மற்றும் மேலோட்டமான பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதில் படர்தாமரை எனப்படும் பூஞ்சை தொற்றும் ஒன்றாகும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. இதேபோன்று மற்ற தொற்றுநோய் பாதிப்பிலும் பின்பற்றப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், நோயாளிகள் விரைவான சிகிச்சைக்காக ஸ்டீராய்டு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துகின்றனர்.
இந்த மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொற்று அதிகரிக்கும், நோய் முற்றிய நிலையில் நோயாளிகள் அதற்கு முறையான மருந்துகளை எடுக்கும்போது மட்டுமே அது முழுமையாக குணம் அடையும். இந்த நோய் பாதித்த ஒருவர், மற்றவர்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க, முறையான சிகிச்சையைப் பெற உடனடியாக ஒரு தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
* ஆலோசனை மிக அவசியம்
கோடைக்கால சருமபாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சூரிய ஒளி உடலில் படாமல் இருக்க குடை, அகலமான பெரிய தொப்பி, உடலை முழுமையாக மூடும் ஆடைகள் மற்றும் சன்கிளாஸ்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் தோலின் தன்மை, வாழ்க்கை முறை மற்றும் பிற நிலைமைகளைப் பொறுத்து சரியான சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.
மருந்துக்கடைகளுக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கி பயன்படுத்தும் சன்ஸ்கிரீன் பொருத்தமற்றதாகவோ அல்லது ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தும். தோலை ஆரோக்கியமாக பராமரிக்க ஒரு முறை தோல் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
* ஆரோக்கியமான உணவுப்பழக்கம்
ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல் போன்றவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தோல் என்பது உள் ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகும். தற்போது, நம்மில் பலர் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில்லை. எதைக் கண்டாலும் சாப்பிடுகிறோம். முக்கியமாக நொறுக்குத் தீனிகள் மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடுகிறோம்.
இதைச் செய்வதால் உடலில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் உள்ளது. இது சருமத்தை உயிரற்றதாக மாற்றும் அபாயம் உள்ளது. எனவே, நல்ல உணவுகளை சாப்பிடுவது நல்லது. சமச்சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, நிம்மதியான தூக்கம் மற்றும் மன ஆரோக்கியம் போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
* முடியின் மீது கவனம் தேவை
தலையில் உள்ள முடியில் அழுக்கு சேராதவாறு நன்கு தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். முடியை சரியாக பராமரிக்கா விட்டால் தலையில் வீக்கம், பொடுகு மற்றும் தோல் அழற்சி போன்றவை ஏற்படும். குளிப்பதற்கு 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன் தலைக்கு எண்ணெய் தடவுங்கள். உச்சந்தலையில் எண்ணெய் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் பசையுடன் வெளியே செல்வது என்பது அதிக அழுக்கு சேருவதற்கு வழிவகுக்கும்.
எந்தவொரு தோல், முடி மற்றும் நகப் பிரச்னைகளுக்கும், தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது. தோல் தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்க நீரிழிவு நோய், தைராய்டு பிரச்னைகள் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் அதற்கு முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சன்ஸ்கிரீன் மிகவும் நல்லது
கோடைக்காலம் என்றாலே பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்திலேயே வெளியில் அதிக நேரத்தை செலவிடுகிறோம். எனினும் சூரிய ஒளி, பூச்சிகள் மற்றும் விஷ தாவரங்கள் போன்றவற்றின் அதிகரித்த வெளிப்பாடு காரணமாக சில அரிப்பு மற்றும் வலிமிகுந்த தடிப்புகளை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக சருமத்தில் பல்வேறு வகையான பிரச்னைகள் ஏற்படலாம்.
வானிலை எதுவாக இருந்தாலும், முகத்திலும், சருமத்திலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது. வெளியே செல்லும் போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் போதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. இது சருமத்தை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
