ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிபிஐ விஜிலென்ஸ் டீம்: போலி மருந்து வழக்கை கைவிட ரூ.1 கோடி லஞ்சம்: தொழிலதிபர், இன்ஸ்பெக்டர், இடைத்தரகர் கைது

புதுச்சேரி: போலி மருந்து வழக்கை கைவிட ரூ.1 கோடி லஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பாக தொழிலதிபர், இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை சிபிஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தொழிலதிபர் வீட்டில் நடத்திய சோதனையில் 2 கிலோ தங்கம், ரூ.40 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுதொடர்பாக புதுச்சேரி சிபிசிஐடி போலீசார், வழக்குப்பதிவு செய்து போலி மருந்து தொழிற்சாலை நடத்திய புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் வசிக்கும் ராஜா (எ) வள்ளியப்பன் (42), அவரது மனைவி ஞானப்பிரியா, பங்குதாரரான என்.ஆர்.காங்கிரஸ் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஜி.எஸ்.டி தொகை குறைக்க உதவிய ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13 பேர் என மொத்தமாக 26 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி மற்றும் சென்னை சேர்ந்த தனியார் மருந்து நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக 2 வழக்குகள் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பால் விசாரணை கிடப்பில் போனது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ராஜா உள்பட 20 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். சிறையில் இருந்த வெளியே வந்த ராஜா, இவ்வழக்கு விசாரணை மேற்கொள்ளாமல் இருக்க டெல்லி போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேரம் பேச முயன்றுள்ளார். இதனை கண்டுபிடித்த சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் போலி மருந்து வழக்கில் கைதாகி வெளியே வந்த நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். அப்போது, ராஜாவுக்கு இடைத்தரகர் அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் செயல்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த மே மாதம் 14ம்தேதி ராஜா, ராஜ்குமார் ஆகியோர் டெல்லி விமான நிலையம் அருகே டெல்லி கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். பின்னர், அவர் மூத்த அதிகாரியிடம் அழைத்து சென்று போலிமருந்து வழக்கை கைவிடுவது தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது டெல்லி போலீஸ் மூத்த அதிகாரி உதவி செய்ய ரூ.3 கோடி பணம் தேவை. அதில் ரூ.1.5 கோடி முன் பணம் தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் கூறியுள்ளார். பின்னர், ராஜ்குமார் குஜராத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங்கை சந்தித்து, டெல்லியில் பணத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது குறித்து பேசிவிட்டு, இருவரும் ஒன்றாக குஜராத்தில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளனர்.

டெல்லியில் உள்ள மூத்த அதிகாரி உடனடியாக பணம் கேட்டதால் ராஜா, சென்னையில் உள்ள ஹவாலா ஏஜெண்டை தொடர்பு கொண்டு ரூ.1 கோடி அனுப்புமாறு கூறியுள்ளார். தொடர்ந்து, கடந்த 8ம்தேதி டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங்கை, ராஜ்குமார் பணத்தை கொடுத்தபோது, அங்கு பதுங்கியிருந்த சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு குழுவினர் கையும் களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, சிபிஐ இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சென்னை சிபிஐ லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு கடந்த 8ம்தேதி போலி மருந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜா (எ) வள்ளியப்பனை புதுச்சேரி அரவிந்தர் வீதியிலுள்ள ராஜாவின் டிராவல்ஸ் அலுவலகத்தில் கைது செய்தது.

தொடர்ந்து, ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இரவு முழுவதும் சோதனை நடத்தி அங்கிருந்து 2 கிலோ தங்கம், ரூ.40 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றினர். மேலும் அவரது டிராவல்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடத்திய குழுவினர் தொழிலதிபரான ராஜா, அவரது மனைவி ஞானப்பிரியா ஆகியோரிடம் வாக்குமூலம் சேகரித்தனர். பின்னர் ராஜாவை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, டெல்லிக்கு அழைத்து சென்றனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்க உள்ளனர். புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் அடுத்தடுத்து மோசடிகள் பூதாகரமாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: