எல்லோருக்கும் ஆரோக்கியமே சிறந்த செல்வம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆகவே, ஒவ்வொரு மனிதருக்கும் ஆரோக்கியத்தை நோக்கிய பயணம் என்பதை காலம்தான் முடிவு செய்கின்றது. கோட்சார கிரகங்கள் நகர்வுகளில் ஏற்படும் மாற்றத்தை பொறுத்து நோய்களும் மாறுபடுகின்றன. இதில், சிலருக்கு மனிதர்களின் பழக்க வழக்கங்களும் நோயை உற்பத்தி செய்கின்றன. இந்த பழக்க வழக்கங்களில் உணவு உண்பது, உறங்குவது, விழித்தெழுவது ஆகிய அனைத்தும் அடங்கும். எல்லா பழக்க வழக்கங்களும் ஒரு எல்லைக்குள் வரையறுக்கப்பட்டது. எந்த ஒரு விஷயமும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய்தான் என திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்.
சில நோய்கள் இருப்பிடத்தாலும், சில நோய்கள் விலங்குகளாலும் உற்பத்தியாகிறது. ஆரோக்கியம் என்பது ஆற்றலின் நடுநிலைமையாகும். இயற்கையின் ஆற்றலை நாம் அதிகமாக பெற்றாலும், தேவைக்கு குறைவாக இருந்தாலும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இயற்கையின் ஆற்றல்களை மனித சரீரம் சமநிலையோடு வைத்துக் கொள்வதே ஆரோக்கியம். அதில் உள்ள சுக யோகத்தை காண்போம்.
சுக யோகம் என்றால் என்ன?
ஒரு ஜாதகத்தில் நான்காம் (4ம்) பாவகாதிபதியும், பதினோராம் (11ம்) பாவகாதிபதியும் அசுப கிரகங்களின் பார்வைகளினால் கெட்டுப் போகாமலும், அசுப ஸ்தானங்களில் அமராமலும் அல்லது அசுப கிரகங்களோடு இணையாமலும் சுப கிரகங்களின் பார்வையோடு நான்காம் (4ம்) பாவகத்தை குரு பார்வை செய்தால், அதுவே சுக யோகமாகும். மேலும், லக்னாதிபதியும் வலிமையாக நல்ல அமைப்புடன் இருக்க வேண்டும் என்பதே ஜோதிடத்தின் விதியாகும்.
சுக யோகத்தின் சூட்சுமங்கள் என்ன?
* நான்காம் பாவகத்தில் (4ம்) அசுப கிரகங்கள் பயணிக்கும் காலத்தில் சிற்சில உபாதைகள் ஏற்படக்கூடும். அச்சமயம் அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையை வழிபாடு செய்வது பிணியிலிருந்து உங்களை காப்பாற்ற
செய்யும். அதற்குரிய பரிகார சாந்திகளை செய்துகொள்வது சிறப்பைத்தரும்.
* லக்னாதிபதி வலிமை குறைந்த காலத்திலும் சில பிணிகள் ஏற்படும். பொதுவாக ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை குறைந்து காணப்பட்டாலும் நீசம் பெற்றாலும் பிணிகள் ஏற்படும்.
* ஒருவரின் வாழ்வில் குறைந்தபட்சம் மூன்று முறை சனி பகவான் சந்திரன் மீது பயணப்படுவார். அவ்வாறு பயணப்படும் காலத்தில் சிலருக்கு உடல் உபாதைகள் மற்றும் சில பிணிகள் உண்டாகும்.
* ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் (6ம்) அதிபதியைவிட நான்காம் (4ம்)
அதிபதி வலிமையாக இருந்தால், நோய்கள் வரும், போகும், குணமாகும். நான்காம் (4ம்) அதிபதியைவிட ஆறாம் அதிபதி வலிமை பெற்று இருப்பின் நோய்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான ஜோதிட விதி.
கிரகங்களும் உருவாக்கும் பிணிகளும்
* சூரியனால் வெப்பம் தொடர்பான நோய்களும், உடலின் வெப்பத்தால் நோய் என்ன என்பதை அறிய முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும்.
* சந்திரனால் நீர் தொடர்பான நோய்களும், உடலில் சற்று நீர் கோர்த்து வீக்கமான உபாதைகளும் உண்டாகும்.
* செவ்வாயால் பித்தம் மற்றும் விபத்து தொடர்பான சுகவீனங்களும், ரத்த அழுத்தம் போன்ற நோய்களும் உண்டாகும்.
* புதனால் நரம்பு தொடர்பான நோய்களும், வாதம் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும்.
* வியாழன் கிரகத்தால் கொழுப்பு மற்றும் வாயு தொடர்பான நோய்களும், உடல் பருமனால் ஏற்படும் பிரச்னைகளை உருவாக்கும்.
* சுக்கிரனால் ஹார்மோன்கள் தொடர்பான நோய்களும், நீரிழிவு நோய்களும் உண்டாகும்.
* சனியால் உடல் முழுவதும் ஆற்றல் இழக்கப்பட்டு இயக்கமின்மையால் பலவீனம் தொடர்பான நோய்கள் ஏற்படும்.
* ராகுவால் நீண்ட கால நோய்களும், சரும நோய்களும், அம்மை போன்ற நோய்களும் உண்டாகி தழும்புகளை உண்டாக்கும்.
* கேதுவால் நோய் என்ன என்பதையே அறிய முடியாத நோய்களும் உருவாகும் என்பதை நமது முன்னோர்கள் வரையறுத்து சொல்கிறார்கள். இதில், இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்து யுத்தத்தை உருவாக்கும் பொழுது வேறு வகையான புதுப்புது நோய்களை உருவாக்கும்.
* பொதுவான நோய்களையும் கிரகங்களையும் நாம் அறிந்திருந்தாலும், அதற்கான தீர்வுகளை அந்த நோய்களை தருவித்த கிரகங்கள் தருமா? நோய்களை குணமாக்க நம்முடைய சுகஸ்தானத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பதே ஜோதிடத்தின் பொதுவான விதியாகும். இருந்தாலும் சில நேரங்களில் எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்திருந்தாலும் நோய்களை கண்டறிய முடியாத சூழ்நிலைகள் உருவாகும். அதற்கு சில நேரங்களில் மருத்துவர்கள் குழப்பத்தால் வைட்டமின் குறைபாடுகள் என கூறி வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பது நடைமுறையில் பார்த்துள்ளோம். மருத்துவமும் – ஜோதிடமும் கலந்த செயல்பாடுகள் பிணியை முற்றிலும் குணமடையச் செய்வதற்கான நூறு சதவீதம் வாய்ப்புகள் உண்டு. வயோதிகம் காரணமாக சில பிணிகளை நாம் கடந்துபோக வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்பதே நிதர்சனமான உண்மை.
