சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் கட்சியில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி – எஸ்.பி.வேலுமணி என இருதரப்பாக பிரிந்துள்ளது. இதில் எஸ்.பி.வேலுமணி தரப்பை சார்ந்த பலரையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
வேளாங்கன்னிக்கு சென்றிருந்த நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் பெஞ்சமின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் தான் எந்த அணியும் கிடையாது, என்னை ஏன் நீக்கினீர்கள் என்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் தன் ஆதரவாளர்களுடன் தியானம் மேற்கொண்டார். இது தொடர்பாக கண்ணீர் மல்க வீடியோவும் வெளியிட்டார்.
அதில், “சட்டமன்ற தேர்தலில் நான் தோற்று விட்டேன். அப்படியான என்னை கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டார்கள். கட்சியில் பிரச்னை நடந்து வரும் நிலையில் நான் யார் பக்கமும் இல்லை. நான் தேர்தலில் தோற்றதும் என் குடும்பத்தினர் என்னை தேற்றுவதற்காக வெளியூர் அழைத்து சென்றார்கள். வந்து பார்ப்பதற்குள் இப்படி நடந்து விட்டது. ஓரிரு நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பாருங்கள்” என அவர் கூறியிருந்தார்.
அவரது இந்த வீடியோ அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அண்ணா அறிவாலயத்திற்குத் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வந்தார். அவரை திமுக நிர்வாகிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுகவைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்ஜமின் திமுகவில் இணைந்தார். பெஞ்சமின் தலைமையில் அதிமுகவை சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அதிமுக செயலாளர் யாமினி இளையராஜா, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ், 155வது வட்ட செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளர் காரம்பாக்கம் கணபதி, வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் அயப்பாக்கம் அ.ம.துரை வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் வெளியில் வந்த பெஞ்சமின் நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக திகழக் கூடிய திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு,க,ஸ்டாலின் அன்பினாலும், பண்பிணாலும், அரவணைப்பினாலும் இன்றைக்கு திமகவில் நான் இன்று புதிதாக இணைந்துள்ளேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொண்டர்களை அரவணைத்து செல்லக்கூடிய அவரது மான்பிணை போற்றக்கூடிய வகையில் அவரது அன்பினால் ஈர்க்கப்பட்டு திமுகவில் என்னை இணைத்து கொண்டுள்ளேன்.
இதுவரையில் நான் சார்ந்த இயக்கத்துக்கு எப்படி உண்மையாகவும், விசுவாசமாகவும் பணியாற்றினேனோ அதேபோன்று இப்போது இணைந்துள்ள திமுகவில் எனது களப்பணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லக்கூடிய கட்டளையை ஏற்று இந்த இயக்கத்துக்காக அரும்பாடுபடுவேன் என்பதை சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளேன்.
திமுக நிர்வாகிகளுடன் இணைந்து களப்பணியை செய்வேன்.
எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவில் இருக்கக்கூடிய தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை இன்று ஒரு கட்டுக் கோப்புடன் மு.க.ஸ்டாலின் சொலக்கூடிய கருத்துகளை ஏற்று ஒரு சகோதாரத்துவத்துடன் இருக்கக் கூடிய பாங்கின் அடிப்படையில் தலைவர் வழிநடத்தி வருகிறார். நிச்சயமாக இந்த இயக்கத்துக்கும், கட்சி தலைமைக்கும் நான் கட்டுப்பட்டு, அவர்கள் சொல்லக்கூடிய கட்டளையை ஏற்று நான் களப்பணியாற்றுவேன். அதிமுகவில் ஜெயலலிதா மறைக்கு பின்னால் அடுத்து வந்த தலைமை ஏற்று நான் நன்றாகத் தான் பணியாற்றினேன்.
இன்று இருக்கக் கூடிய அரசியல் சூழல், நான் தொடர்ச்சியாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அந்த நல்ல நோக்கத்துக்காக தான் திமுகவில் இணைந்துள்ளேன். திமுக தலைவர், தொண்டர்களை வழிநடத்தும் விதத்தை எல்லாம் நாங்கள் உற்று நோக்கியுள்ளோம். அந்த நல்ல நோக்கத்துக்காக தான் இன்று எதிர்கட்சியாக இருந்தாலும் கடந்த காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. அந்த திட்டங்களை எல்லாம் ஆளும் அரசு தொடரக்கூடிய நிலை தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
