சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று காலை டெல்லி புறப்படு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நதிநீர் ஒப்பந்தப்படி, இரு மாநிலங்கள் இடையே, நதிநீர் ஆறுகள் இடையே, ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, முதல் மடை மாநிலத்தில், ஏதாவது கட்டுமான பணிகள் செய்வதானால், கடைமடை மாநிலத்தின் அனுமதியில்லாமல், அதை செய்யக்கூடாது என்று விதி உள்ளது.
ஆனால், தமிழ்நாடு அனுமதி இல்லாமல், கர்நாடக மாநிலத்தில் அணை கட்டுவதற்கு டிபிஆர் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தது தவறு. ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது முதல் முறையாக, மேட்டூர் அணை திறக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் மேட்டூர் அணையில் 40 டிஎம்சி தண்ணீர் தான் இருக்கிறது. அதில் குறைந்தது, 90 அடி உயரம் தண்ணீர் வந்தால்தான், அணை திறக்க முடியும். இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநில அரசு, இன்னொரு அணை கட்டினால், தமிழ்நாட்டில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு விடும். எனவே, இது மிகப் பெரிய ஒரு அநீதி. இதைகுறித்து எல்லாம் டெல்லியில் முதலமைச்சர் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
