ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ், 14 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்: இன்று மனுக்கள் மீது பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் 14 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மனு பரிசீலனை நடக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஏற்கனவே வகித்து வந்த மாநிலங்களவை எம்பி பதவியை மே 7ம் தேதி ராஜினாமா செய்தார். இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1ம் தேதி துவங்கியது. ஜூன் 8ம் தேதி (நேற்று) மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் திங்கள் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு தவெக கட்சி ஆதரவு அளிக்கிறது. இதுதவிர சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தல் மன்னன் பத்மராஜன், அக்னி ஆழ்வார், ஆவடி வி.ஜெயக்குமார், தமிழ் செல்வமணி, கந்தசாமி, ராஜன்பாபு உள்ளிட்ட 14 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (9ம் தேதி) காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 11ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போட்டி இருந்தால், ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்று, அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே அரசியல் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்று வேட்புமனு பரிசீலனையின்போது அவரது மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது. சுயேச்சைகள் 14 பேருக்கு ஒரு எம்எல்ஏ கூட முன்மொழியாததால், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

Related Stories: