மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 26,605 கள உதவியாளர்கள், 14,358 வயர்மேன் பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் போது, இப்போது பணியில் உள்ள கேங்மேன்களை அந்த பணிகளில் நியமித்து விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும் புதிதாக ஆள்களை தேர்வு செய்யலாம்.

கேங்மேன்களாக பணியாற்றி வருபவர்கள் வயர்மேன், கள உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதியையும், பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்; கேங்மேன்களை அடுத்தக்கட்ட பணிகளுக்கு நியமிப்பது குறித்து மின்வாரியம் ஆய்வு செய்யலாம் என்று நீதிமன்றங்களும், தொழிலாளர் நல அமைப்புகளும் பரிந்துரைத்துள்ளன. ஆனால், மின்வாரியம் மட்டும் இவற்றையெல்லாம் செவிமடுக்க மறுக்கிறது.

மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் கேங்மேன்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து 500 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணி செய்ய வேண்டியிருப்பதே அவர்களுக்கு பெரும் தண்டனையாகும். இந்த தண்டனையிலிருந்து கேங்மேன்களை மீட்கவும், அவர்களின் தகுதிக்கேற்ற பணியும், ஊதியமும் கிடைப்பதை உறுதி செய்யவும் அவர்களை வயர்மேன், கள உதவியாளர் பணிகளில் அமர்த்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: