காங்கிரஸ் உருவாக்கிய இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று அளித்த பேட்டி:
காங்கிரஸ் உருவாக்கிய இந்தியா கூட்டணியில் திமுக இல்லை. எனவே இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளவில்லை. ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் எங்களுடைய கொள்கை, நிலைப்பாட்டுக்கு ஏற்ப முடிவை எடுத்தால் வரவேற்போம். பாஜவுக்கு எதிராக மதச்சார்பற்ற வலுவான ஒரு கூட்டணி உருவாகும். தேர்தல் வெற்றி, தோல்வியால் அசைத்து பார்க்க முடியாது. 75 ஆண்டுகளில் பல வெற்றிகள், தோல்விகளை சந்தித்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெறும்போது கொள்கைகளை செயல்படுத்துவோம். வெற்றி பெறாத நேரத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் செயல்படுத்த வேண்டும் என்று அழுத்தத்துடன் போராடுவோம். இவ்வாறு கூறினார்.

அப்போது அவரிடம், ‘தவெக ஆட்சிக்கு நாங்கள் சுயமாக முடிவெடுத்து ஆதரவு அளித்தோம்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டி.கே.எஸ்.இளங்கோவன், ‘அந்தந்த கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் விமர்சிக்க கூடாது. அது அந்த கட்சியின் உரிமை என்று எங்களுடைய தலைவரும் சொல்லி இருக்கிறார்’ என்றார்.

Related Stories: