சென்னை: தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் அவ்வப்போது ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் கட்டுமான பொருட்கள் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ரூ.3,300க்கு விற்கப்பட்ட யூனிட் ஜல்லி ரூ.500 உயர்ந்து ரூ.3,800க்கு விற்பனையாகிறது. ரூ.4,000க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.500 உயர்ந்து ரூ.4,500க்கும். ரூ.5,000க்கு விற்கப்பட்ட யூனிட் பி.சாண்ட் ரூ.500 உயர்ந்து ரூ.5,500க்கும் விற்பனையாகிறது.
மாவட்டங்களை பொறுத்து விலையேற்றத்தின் அளவு சற்று மாறுதலுக்கு உட்பட்டது. இதனையடுத்து டீசல் விலை உயர்வு, குவாரிகளின் எண்ணிக்கை குறைப்பு காரணமாக இந்த விலையேற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட் விலை உயர்வால் கட்டுமான டெவலப்பர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அதேபோல தனியாக புதிய வீடுகளை கட்டுபவர்களும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
