குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை: சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளப் பகுதிகளில் நேற்று தொடங்கியுள்ளது. மேலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை நேற்று முன்னேறியுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், நாளை தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த நான்கு நாள்களுக்கு தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை கேரள-கர்நாடகா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories: