சென்னை: காங்கிரஸ் கட்சியிடம் இருந்து விலகி மக்களவையில் தனியாக அமர திமுகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் திடீரென விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளித்தது. காங்கிரசுடனான கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, மக்களவையில் தங்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாத தனி இருக்கை அமைப்பை ஒதுக்கி தருமாறு சபாநாயகருக்கு திமுக எம்.பி கனிமொழி கடிதம் எழுதியிருந்தார்.
திமுக மக்களவை குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய அந்த கடிதத்தில், ‘மாறிவரும் அரசியல் சூழலால் காங்கிரஸ் கட்சியுடனான எங்கள் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, தொடர்ந்து காங்கிரஸ் எம்பிக்களுடன் இணைந்து தற்போதைய இருக்கை அமைப்பை தொடர்வது பொருத்தமற்றது’ எனக் குறிப்பிட்டு, திமுக எம்பிக்களுக்கு தனியாக இருக்கை ஒதுக்கித் தர கோரிக்கை விடுத்திருந்தார்.
மக்களவை செயலகம் திமுகவின் இந்த கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்று, அவர்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் அமரும் இடங்களில் இருந்து விலகி, தனி இருக்கை அமைப்பை ஒதுக்கியுள்ளது. மேலும் திமுக எம்பிக்கள் அமர வசதியாக தனி இருக்கை ஏற்பாட்டைச செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
