சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ரூ.397 கோடி மின்மாற்றி டெண்டர் தொடர்பான 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு

* ரூ.10 லட்சத்திற்கு ஆசைப்பட்டு மே 16, 17 ஆகிய நாளில் திட்டமிட்டு எடுத்தது விசாரணையில் அம்பலம்: கணினி பராமரிப்பு ஊழியர் கைது

சென்னை: தமிழக மின்வாரியத்தில் 2021-23ம் ஆண்டு காலத்தில் 45 ஆயிரம் மின்மாற்றிகள் ெகாள்முதல் செய்ய ரூ.397 மதிப்பிலான டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்ற அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையில் டெண்டர் கோரியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெண்டர் விவரங்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கணினியில் பரமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையிில், 18 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் உள்ள முக்கிய கோப்புகளின் பக்கங்கள் அனைத்தும் மாயமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மின்வாரிய தலைமையகம் சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஆயுஷ் மணி திவாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இவர்கள் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் மலர்விழி கடந்த 2ம் தேதி புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரின் படி, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பிஎன்எஸ் 305 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில் கடந்த மே மாதம் 3வது வாரத்தில் சனிக்கிழமை (16ம் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (17ம் தேதி) இந்த திருட்டு நடந்து இருப்பது உறுதியானது. இந்த நாளில் பணிக்கு வந்த அனைவரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மின்வாரிய அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப பிரிவில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்த ஊழியரை மட்டும் போலீசார் பிடித்து ரகசியமாக விசாரணை நடத்தினர்.

இதகுறித்து போலீசார் கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவர், கடந்த 11 மாதங்களாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கணினி பராமரிப்பு தொழிநுட்ப பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இவர் ஒவ்வொரு வார இறுதி நாட்களில் ஊழியர்கள் இல்லாத நேரத்தில் அனைத்து கணினிகளையும் பராமரிப்பதும், கணினியில் குறைகள் இருந்தால் அதை சரிசெய்யும் பணி செய்து வந்ததும் தெரியவந்தது.

கோபிநாத்திடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், டெண்டர் சம்பந்தமாக பராமரிக்கப்பட்டு வந்த கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்குகளை மட்டும் திருடிவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராதப்படி அதற்கு பதில் வேறு ஒரு ஹார்ட் டிஸ்க்குகள் பொருத்த வேண்டும் என்றும், அப்படி எடுக்கப்பட்ட ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்குகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வரை பணம் தருவதாக கூறியதாகவும், அதன்படி கோபிநாத் பணத்திற்கு ஆசைபட்டு மர்ம நபர் கூறியபடி டெண்டர் தொடர்பான ஹார்ட் டிஸ்க்குகள் திருடி சம்பந்தப்பட்ட நபரிடம் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

ஹார்ட் டிஸ்க் பெற்றுக்கொண்ட நபர் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு இருந்ததால் தன்னால் அடையாளம் சரியாக கூற முடியவில்லை என்று கோபிநாத் தெரிவித்துள்ளார். இருந்தாலும், கோபிநாத்திடம் முக்கிய டெண்டர் தொடர்பான கோப்புகள் அடங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்குகள் மட்டும் எப்படி அடையாளம் கண்டு எடுத்தார். மின்வாரிய அலுவலகத்தில் ஒவ்வொரு தளத்திலும் 100க்கும் மேற்பட்ட கணினிகள் உள்ளன. ஆனால் கோபிநாத் சாரியாக டெண்டர் பராமரித்து வந்த கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்குகள் மட்டும் திருடிவிட்டு, வேறு ஹார்ட் டிஸ்க்குகள் பொருத்தியுள்ளார்.

இதனால் இந்த மோசடி பின்னணியில் மின்வாரியத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கோபிநாத் செல்போனை பறிமுதல் செய்து, அவர் பணியில் சேர்ந்த 11 மாதங்களில் அவருடன் தொடர்பில் இருந்த மின்வாரிய அதிகாரிகள் யார் யார் என்பது குறித்து தடயவியல் அதிகாரிகள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறோம். ஹார்ட் டிஸ்க், நிலக்கரி கோப்புகள் என தனித்தனியாக 8 புகார்கள் வந்துள்ளன. இதனால் ஒவ்வொரு புகாரின் மீது நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

அதேநேரம் இது திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் உள்ள டெண்டர் தொடர்பான ஆவணங்கள் சிபிஐ விசாரணையில் உள்ளதால், கைது செய்யப்பட்ட கோபிநாத் அளித்த தகவல்களை முழுமையாக தெரிவிக்க முடியாது என்றும், விசாரணை தகவல்கள் வெளியே கசிந்ததால், ஹார்ட் டிஸ்க்குகள் விலை கொடுத்து வாங்கிய நபர் யார் என்பது கண்டுபிடிக்க சிரமம் ஏற்படும்.

எனவே முழுமையான விசாரணை நடந்த பிறகே ஹார்ட் டிஸ்க் திருட்டு மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான கோப்புகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணையில் இருக்கும் நிலையில் ரூ.397 கோடி மின்மாற்றி டெண்டர் தொடர்பான 18 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான கோப்புகள் மாயமானது தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ஹார்ட் டிஸ்க் மாயம் குறித்து விசாரணை அமைச்சர் தகவல்
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் மாயமான விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் தொடர்பான ஆவணங்களையும் காணவில்லை. ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. யாரும் தப்ப முடியாது. கடந்த மாதம் சிலரை பணியிடை நீக்கம் செய்தோம். அதன் பிறகு இது நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: