மின்வெட்டை மறைக்கவே ஹார்டிஸ்க் விவகாரம்: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

கோவை: கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ.வுமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மக்கள் மின்வெட்டிற்கு எதிராக போராடி வருகின்றனர். புதிய அரசு பொறுப்பேற்று 20 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை மின்விநியோக நிலைமை குறித்து முழுமையான ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

மற்ற துறைகளை போல அல்ல மின்சார துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டிய துறை. திமுக ஆட்சியில் உச்சபட்ச மின்தேவை இருந்த போதும் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டது. மின்வாரிய டெண்டர் நடைமுறைகள் ஏற்கனவே பல கட்ட கண்காணிப்புகளுடன் நடைபெற்று வருகிறது. இதில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம்பெறும் குழுக்கள் இறுதி ஒப்புதல் வழங்குகிறது. இந்நிலையில், தற்போது புதிதாக 3 குழுக்கள் அமைப்பது என்பது புதிய விதிமுறைகளை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது ஆகும்.

மேலும், ஹார்டிஸ்க் காணாமல் போனது என்றால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு பிரச்னையை திசை திருப்பும் செயல் இது. மின்துறையை சீரமைக்க போகிறோம் என சாக்குப்போக்கு சொல்லாமல், முதலில் மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

ரீல்ஸ் மூலமாக ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், அதே பாணியில் அரசை நடத்த முயற்சி செய்கிறார். இங்கு ரியல் ஆட்சி இல்லை. ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளில் எந்த அரசுக்கும் அவகாசம் வழங்க முடியாது. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை. அதில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை செய்ய இந்த அரசு தவறி விட்டது. இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

Related Stories: