நான்தாங்க அமைச்சரு… பத்திரப்பதிவு ஆபீஸ் ‘ரீல்ஸ்’ ஆய்வு

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சார்பதிவாளர் விடுமுறையில் சென்றிருப்பதால் பொறுப்பு சார்பதிவாளரிடம் அலுவலக நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் பதிவுக்காக காத்திருந்த பொதுமக்களிடம், ‘‘நான் தான் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்’’ என தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்ட அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், ‘‘பத்திரப்பதிவு மேற்ெகாள்ள ஏதும் லஞ்சம் பெறப்படுகிறதா’’ என்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அமைதியாக இருந்தனர். இதைப் பார்த்ததும் அமைச்சர், ‘‘நீங்கள் அமைதியாக இருப்பதைப் பார்த்தாலே ஏதோ இருப்பதாக தெரிகிறது’’ என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அமைச்சர் வந்தது முதல் கிளம்பிச் சென்றது வரை, அவருடன் வந்த நபர் அனைத்தையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் செல்போன் ரீல்ஸ் வீடியோவிற்காக பதிவு செய்து கொண்டார். ரீல்ஸ் வீடியோவிற்கு நடிப்பதை போலவே அமைச்சரின் அனைத்து நடவடிக்கைகளும் இருந்தது. ரீல்ஸ் வீடியோவிற்காக அமைச்சர் ஆய்வு செய்தது அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.

முன்னதாக அமைச்சர், திருப்பரங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர்களுடன் கலந்துரையாடினார். அங்கிருந்தவர்களிடம், ‘‘யாரும் லஞ்சம் கொடுக்கக் கூடாது. அதிகாரிகள் லஞ்சம் வாங்கக் கூடாது’’ என்றார். 10 நிமிடத்திற்கள் ஆய்வு முடித்து கிளம்பி சென்றார்.

Related Stories: