ரூ.12,698 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.3,923 கோடி: தென் மாநிலங்களை ஓரம்கட்டும் ஒன்றிய அரசு

* உ.பி., குஜராத்துக்கு நிதி அதிகரிப்பு: ஜூலை 1ம் தேதி முதல் அமலாகிறது தவெக அரசு கப்சிப்

சென்னை: ஜி ராம் ஜி திட்டதின் கீழ் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மாற்றியமைக்கப்பட்டதால் தமிழகத்திற்கு வெறும் ரூ.3,923 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. ஆனால், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பாஜ ஆளும் மாநிலங்களில் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு ஓரம் கட்டி இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளன. ஆனால் தவெக அரசு இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்று அழைக்கப்பட்டும், பொதுமக்களிடம் பரவலாக நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டம் என அறியப்பட்டு வந்ததின் பெயரையும் அதன் பழைய கட்டமைப்புகளையும் மாற்றி நாடாளுமன்றத்தில் ‘ஜி ராம் ஜி’ திட்டம் என்ற ஒரு வரைவு சட்டம் பாஜ அரசு கொண்டு வந்து இரு அவைகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றின.

இதனை பல மாநிலங்களில் ஆளும் கட்சியினர் எதிர்த்தனர். குறிப்பாக, தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ஜன.23ம் தேதி சட்டப்பேரவையில் இத்திட்டத்தினை எதிர்த்து தனி தீர்மானத்தை நிறைவேற்றினார். இது அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டைப் போலவே பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களும் இப்புதிய சட்டத்திற்கு எதிராக தங்களின் சட்டமன்றங்களில் தீர்மானங்களை நிறைவேற்றின.

சுருக்கமாக கூறினால், தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மாநிலத்தின் நிதி உரிமையை நிலைநாட்டவும் ஒன்றிய அரசுக்கு எதிராக தன் வலுவான சட்டப்பூர்வ எதிர்ப்பைச் சட்டமன்றத்தின் வாயிலாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதிவு செய்தன. தற்போது இந்த ஜி ராம் ஜி சட்டம் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது.

அந்தவகையில் 16வது நிதி ஆணைய பரிந்துரையின் படி மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு திருத்தி அமைக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு தற்போது அனுப்பிய வரைவு அறிக்கை அண்மையில் அனுப்பி வைத்துள்ளது. அதில் ஜி ராம் ஜி திட்டத்தில் ஒன்றிய அரசு ஒதுக்கும் ஒட்டுமொத்த நிதி ரூ.95,692 கோடியில் தமிழத்திற்கு வெறும் ரூ.3,926 கோடி மட்டும் கிடைக்க உள்ளன.

கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்கும் ஒட்டுமொத்த நிதியில், தமிழ்நாடு இதுவரை 10 சதவீத பங்கைப் பெற்று முன்னணியில் இருந்தது. ஆனால், புதிய கணக்கீட்டு முறையின்படி, தமிழ்நாட்டின் பங்கு 4.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் எதிர்கால நிதி உரிமை, ஒரேயடியாக பாதிக்கும் கீழ் சரிந்துள்ளதை இந்த தரவுகள் காட்டுகின்றன.

இதுமட்டுமின்றி, ஜிராம்ஜி திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு 8.8 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் 4.20 சதவீதமும், கேரளாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.38 சதவீதமும், தெலங்கானாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.17 சதவீதமும் குறைப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளன.

ஆனால் பாஜ ஆளக்கூடிய உத்தரபிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 9.67 சதவீதத்தில் இருந்து 17.62 சதவீதமும், பீகாருக்கான நிதி 6.10 சதவீதத்தில் இருந்து 9.95 சதவீதமும், மராட்டிய மாநிலத்திற்கு நிதி 3.99 சதவீதத்திலிருந்து 6.44 சதவீதமும், குஜராத்துக்கு அளிக்கப்படும் நிதி 1.49 சதவீதத்தில் இருந்து 3.76 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிலுவை தொகையான ரூ.4,034 கோடியை (கூலி மற்றும் பொருட்கள் பங்கு) ஒன்றிய அரசு நீண்ட நாட்களாக தமிழ்நாட்டிற்கு வழங்காமல் இழுத்தடித்தபோது திமுக சார்பில் மாநிலம் தழுவிய பிரமாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கல்வி நிதியை சமக்ர சிக்‌ஷா அபியான் முடக்குவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை தராமல் தாமதிப்பது மற்றும் வரிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு தகுந்த பங்களிக்காமல் புறக்கணிப்பது என பல்வேறு தளங்களில் ஒன்றிய அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையைமு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

தமிழக முதல்வர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவாரா அல்லது போராட்டங்களை முன்னெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அமைதியாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* 12 வருடத்தில் ரூ.87 ஆயிரம் கோடி நிதி
கடந்த 2014 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடமிருந்து ஒட்டுமொத்தமாக ரூ.87,639 கோடியை பெற்றுள்ளது. நாட்டின் மொத்த நிதியில் 10 சதவீதம் பங்கினை தமிழ்நாடு மட்டுமே பெற்று வந்த நிலையில், தற்போதைய புதிய சட்ட மாற்றங்கள் இந்த நிதிப் பகிர்வை பாதியாகக் குறைத்துள்ளன. கடந்த காலங்களை பொறுத்தவரை 2023 -24 நிதியாண்டில் ரூ.12,698 கோடி, 2024-25 நிதியாண்டில் ரூ.10,156 கோடி, 2025-26 நிதியாண்டில் ரூ.5,878 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: