* கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் பறிமுதல்; கூடுதல் டிஜிபி அருண் உத்தரவுப்படி அதிரடி
சென்னை: முகூர்த்த நாள் என்பதால் நேற்று அதிகளவில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி அருண் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 46 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசின் பல்ேவறு துறைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேநேரம் அரசின் வருவாய் துறைகளில் சார் பதிவாளர் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நிலம் மற்றும் பிற ஆவணங்கள் பதிவு செய்ய முகூர்த்த நாளான ேநற்று வியாழக்கிழமை உகந்த நாளாக இருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய வழக்கத்தை விடு பெரும்பளவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
கடந்த திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளுக்கு முன் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு யாரும் பணம் கொண்டுவரக்கூடாது. எல்லாமே ஆன்லைன் மூலமே பணத்தை கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து, லஞ்சப் புகார்கள் வந்தன. அதேநேரம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் டிஜிபி அருண் நியமிக்கப்பட்டார். அதிரடிக்கு பெயரெடுத்த அருண், ஒரே நாளில் மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்த முடிவு செய்தார்.
மேலும், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சார் பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவுப்படி நேற்று மதியம் 2.30 மணிக்கு சென்னை உட்பட 38 மாவட்டங்களில் உள்ள 46 சார் பதிவாளர் அலுவலகங்களில் அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பெண் காவலர்கள் உட்ப மொத்தம் 320 போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, 46 சார் பதிவாளர் அலுவலகங்களின் வாயில் கதவுகன் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் நிலம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய வந்த பொதுமக்கள் மற்றும் இடைத்தரகர்கள் யாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியே விடவில்லை. அதேபோல் சோதனை நடக்கும் போது வெளியாட்கள் யாரும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் விடவில்லை.
குறிப்பாக சென்னையில் நீலாங்கரை சைதாப்பேட்டை, அடையாறு மற்றும் காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகங்கள், திருப்பத்தூர், வேலூர்(வேலப்பாடி), ஓசூர்(சூளகிரி), கிருஷ்ணகிரி, கோவையில் காந்திபுரம், தொண்டாமுத்தூர், மதுரை, விருதுநகர், சாத்தூர், மயிலாடுதுறை, நெல்லை, தருமபுரி என 38 மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது.
சென்னையில் சவுகார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.32,000, விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2,07,300, செம்பியத்தில் ரூ.1,48,00, அயனாவரம் கொன்னூரில் ரூ.84,000, அடையாரில் ரூ.56,180 கணக்கில் வராத பணம் பறிமுதல் செயப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.89,800, கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1,55,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டியில் உள்ள சேலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் முதல் மாடி அலுவலகத்தின் நுழைவு பகுதியில் உள்ள பால்கனியில் ஒரு கவருக்குள் வைத்து ரூ.20 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளாக வீசப்பட்டிருந்தது. இங்கு கணக்கில் வராத ரூ.3,18,700 கைப்பற்றப்பட்டது. ஒட்டப்பிடாரம் சார் பதிவாளர் அலுவலத்தில் ரூ.2 லட்சமும், பொங்கலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.53 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி, சூளகிரி மற்றும் ராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையில், ரூ.2 லட்சம் சிக்கியது. இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் கணக்கில் வராத லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் 46 சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை இரவு வரை நீடித்தது. இதில், கணக்கில் வராத ரூ.37,75,650 பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கமாக ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகை போன்ற விழாக்காலங்களில் தான் ஒரே நேரத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது எந்த வித விழாக்காலங்கள் இல்லாத நேரத்தில் மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் சோதனை நடத்திய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
