குத்துவிளக்கு ஏற்றியதில் சர்ச்சை மேயர் பிரியா விளக்கம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் மாநகராட்சிப் பள்ளி ஒன்றின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தவெக சட்டமன்ற உறுப்பினருக்கும் மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், விழாவின் போது சட்டமன்ற உறுப்பினருக்கு குத்துவிளக்கு ஏற்ற முதலில் மெழுகுவர்த்தி வழங்கப்படவில்லை என்றும், அவர் புறக்கணிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த சர்ச்சை குறித்து மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

விழா காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவெக சட்டமன்ற உறுப்பினர் காலை 9 மணிக்கு தான் விழா இடத்திற்கு வந்தார். நாங்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அதற்கு முன்பாகவே ரிப்பனை வெட்டி விழாவை தொடங்கியிருக்கலாம். நாங்கள் அவருக்காக காத்திருந்துதான் விழாவை தொடங்கினோம். குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பான நடைமுறை குறித்துப் பேசிய அவர், மாநகராட்சி நெறிமுறைகளின்படி முதலில் மேயர் என்ற முறையில் நான் குத்துவிளக்கு ஏற்றினேன்.

அதன் பின்னர் ஐஏஎஸ் அதிகாரிகளும், தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரும், இறுதியாக கவுன்சிலர் மற்றும் வார்டு தலைவர்களும் விளக்கேற்ற வேண்டும் என்ற வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டது. இந்த நிகழ்வின் போது, நெறிமுறைகளின்படிதான் அனைத்தும் நடைபெற்றது. யாரும் யாரையும் அவமரியாதை செய்யவில்லை. குத்துவிளக்கு ஏற்றும் போது சட்டமன்ற உறுப்பினருக்கு மெழுகுவர்த்தி வழங்கப்பட்டது.

ஆனால் அவரது பகுதிச் செயலாளர் அதனை வாங்கிக் கொண்டார். இது அரசு மற்றும் மாநகராட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் நெறிமுறைகளின்படி அவரிடமே மீண்டும் மெழுகுவர்த்தி வழங்கப்பட்டது. ஆனால், அவர் அதனை மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்கள் குறித்து நாம் ஒன்றும் கூற முடியாது. மாநகராட்சி நெறிமுறைகளின்படி வழங்கப்பட வேண்டிய அனைத்து மரியாதைகளும் முறையாக வழங்கப்பட்டது. இவ்வாறு மேயர் பிரியா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: