சென்னை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2500 கோடி மதிப்பு பங்குகள் வடிவிலான 7.69 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் வரும் 9ம் தேதி ஏலம் விடப்படும் என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2500 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 7.69 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2033 ரூ.1000 கோடி மறுவெளியீடு, 7.74 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036 ரூ.1000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.80 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041 ரூ.500 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 9ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 9ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
