சிங்கப்பெண் படைக்கு சவால் விடும் தவெகவினர் கூட்டு பலாத்காரத்தில் கைதான நிர்வாகியுடன் தவெக எம்எல்ஏ: வைரலாகும் போட்டோ

ஸ்ரீவைகுண்டம்: கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நிர்வாகியுடன் தவெக எம்எல்ஏ விஜி சரவணன் இருக்கும் படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுறுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த தூத்துக்குடி மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன். ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால்.

இவரும் தவெக நிர்வாகி. இருவரும் ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காரில் அழைத்துச் சென்று, ராமநாதபுரம் அருகே ஏர்வாடி தனியார் விடுதியில் தங்க வைத்தனர். பின்னர் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டனர். மயக்கம் தெளிந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி பாலமுருகன், ஜெயபால் இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதானவர்களில் ஒருவரான தவெக நிர்வாகி பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜி சரவணனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தவெக தலைவர் விஜய், முதல்வராக பதவியேற்றவுடன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் சிங்கப்பெண் படை திட்டத்தை அறிமுகப்படுத்தி கையெழுத்திட்டார். ஆனால் அந்த சிங்கப்பெண் படை திட்டம் தொடங்கி வைக்க தேதி குறிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாலியல் பலாத்கார குற்ற வழக்குகளில் தவெகவினர் தொடர்ந்து சிக்கி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

* கட்சியில் இருந்து நீக்கம்
தூத்துக்குடி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை விஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தூத்துக்குடி மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி நிர்வாகியான, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன். கட்சியின் கொள்கைக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். அவருடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: